நாளைய தின எழுக தமிழ் பேரணிக்கு முழுமையாக கைகோர்க்கும் கிழக்கு மக்கள்
வடக்கை தொடர்ந்து கிழக்கில் நாளைய தினம் (10) ஒலிக்க இருக்கும் ‘எழுக தமிழ் பேரணிக்கு’ கிழக்கு மக்கள் முழுமையாக கைகோர்த்து பெரும் ஆதரவை வழங்குவதற்கு அனைவரும் தயாராக இருப்பதாக எழுக தமிழ் தொடர்பாக மக்களின் கருத்துக் கணிப்புத் தெரிவித்துள்ளது.
கடந்த மாதங்களாக ‘எழுக தமிழ்’ பேரணிக்கு அழைப்பு விடுத்து கிழக்கில் நடைபெற்ற ஆதரவு பிரச்சார கருத்துக் கணிப்பின் அடிப்படையில் குறித்த மக்களின் கருத்துக் கணிப்பு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எது எவ்வாறாயினும் தமிழ் மக்கள் பேரவை முன்வைக்கும் கருத்துக் கணிப்புக்கு எதிரான வாதப்பிரதி வாதங்களை முன்வைக்கும் ஒரு தரப்பினர் இரா.சம்பந்தன் முன்னெடுக்கும் அரசியல் செயற்பாட்டை குறித்த ‘எழுக தமிழ் பேரணி’ குழப்புவதாக தெரிவிக்கின்றனர்.
வடக்கைத் தொடர்ந்து கிழக்கில் நடைபெற இருக்கும் ‘எழுக தமிழ் பேரணிக்கு’ ஆயத்தமாகியதில் இருந்து தமிழ் மக்கள் பேரவையின் ஒவ்வொரு பரப்புரையிலும் இரா.சம்பந்தன் முன்னெடுக்கும் எந்தவொரு அரசியல் செயற்பாட்டையும் குறித்த எழுக தமிழ் பேரணி குழப்பாது என அதன் இணைத் தலைவர்கள் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில் இலங்கை தொடர்பாக மிக முக்கியமான தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட இருக்கின்ற நிலையில் தமிழ் மக்கள் மீதான முன்னெடுப்புக்களை வலியுறுத்திய ஸ்ரீ லங்கா அரசின் செயற்பாடு குறித்து எழுக தமிழ் பேரணியின் அரைகூவல் மிக நீண்டு ஒலிக்கயிருக்கும் நிலையில் மிக முக்கிய நாளாக நாளைய எழுக தமிழ் பேரணி நடைபெறயிருப்பதாக குறித்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்தாக அமைகின்றது.
இதேவேளை நாளைய தினம் மட்டக்களப்பு நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெறயிருக்கும் எழுக தமிழ் பேரணிக்கு 10,000 இற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொள்வார்கள் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான ரி.வசந்தராசா இன்றைய தினம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாளைய தினம் நடைபெற இருக்கும் எழுக தமிழ் பேரணிக்குரிய போக்குவரத்து வசதிகள், வருகை தரும் மக்களுக்குரிய இருப்பிட வசதிகள், குடிபான ஒழுங்கு வசதிகள் போன்றவற்றுக்குரிய அனைத்து விதமான ஏற்பாடுகளையும் ஏற்பாட்டுக் குழுவினர் திறன்பட முன்னெடுத்து வருவதாகவும், நாளை காலை 9.00 மணிக்கு எழுக தமிழ் பேரணி மிகவும் பிரமாண்ட மக்கள் கூட்டத்துடன் இடம் பெற இருக்கின்றது.
கிழக்கில் நாளை எழும் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு சிவில் அமைப்புக்கள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் தங்களின் ஆதரவுகளை ஊடக அறிக்கை ஊடாகவும், நேரடியாகவும் தெரிவித்து வருகின்ற இவ்வேளை அனைத்து அமைப்புக்களையும் பொது மக்களையும் அமைக்கின்றோம். ஒட்டுமொத்தமாக கிழக்கு மக்களின் பேராதரவு எழுக தமிழ் பேரணிக்கு கிடைத்துள்ளது.
கடந்த மாதங்களில் இருந்து கிழக்கில் பல மாவட்டங்களிலுள்ள மூலைமுடுக்கு வரைக்கும் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணிக்குரிய ஆதரவு பிரச்சாரமானது நேற்றைய தினத்துடன் முற்றுமுழுதாக நிறைவடைந்த நிலையில் நாளைய தினம் எழுக தமிழ் பேரணி இறுதிப் பிரச்சாரம் இடம்பெறும் நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.