பிரதமர் மோடியின் தீவிர ரசிகன் என உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி நியூயார்க்கில் உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவரும் ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா மற்றும் சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின்னர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளதாவது:
“இந்தியாவுக்கு வர ஆவலாக உள்ளேன். அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளேன். நான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகன். பிரதமர் மோடி இந்தியாவிற்கு சரியான திட்டங்களை கொண்டு வர நினைக்கிறார். அவர் நாட்டின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளார். பிரதமர் மோடி புதிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பு சிறந்த அனுபவமாக இருந்தது. மேலும் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்பேஸ்எக்ஸின் பிராட்பேண்ட் இணைய சேவையான ஸ்டார்லிங்கை இந்தியாவிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளேன். இது கிராமப்புற மக்களுக்கு உதவும்” என எலான் மஸ்க் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்க வானியல் இயற்பியலாளர் நீல் டி கிராஸ் டைசன் பேராசிரியர் நாசிம் நிக்கோலஸ் தலேப் எழுத்தாளர் ராபர்ட் தர்மன் மற்றும் முதலீட்டாளர் ரே டாலியோ ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.