நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘இறுதிப்பக்கம் 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தொடர் வெற்றி நாயகனான நடிகர் மணிகண்டன் அவருடைய சமூக ஊடகத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் மனோ வெ. கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதிப் பக்கம் 2’ திரைப்படத்தில் குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலச்சந்திரன், அபிஷேக் ஜோசப், சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபட் இசையமைத்திருக்கிறார். இன்வெஸ்டிகேட்டட் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை இன்சோமினியாக் ட்ரீம் கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
‘இறுதிப் பக்கம்’ படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில்.. இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ‘இறுதி பக்கம் வால்யூம் 2: பிரெஷ் பிளட் ‘ என்ற வாசகம் இடம் பிடித்துள்ளதால்… படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ஒரு கொலை சம்பவம் நடைபெறுகிறது. அந்த கொலையை யார் செய்தார்கள்? என காவல்துறை தன்னுடைய விசாரணையை தீவிரப்படுத்துகிறது. அதற்கு இணையாக கொலையாளி குற்றத்தை மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார் . இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையேயான பரபரப்பான மோதல் தான் இப்படத்தின் திரைக்கதை ” என்றார்.












