புதிய தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்கான புதிய வழிமுறைகள் அவசியம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற ‘என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா’ கடன் திட்டத்தை அறிமுகம் செய்யும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
கூடுதலான முதலீட்டு ஏற்றுமதி வருமானங்கள் கடந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டிருந்தன. முதலீடுகளை அதிகரித்து தொழில்வாய்ப்புக்களை மேம்படுத்துவது இலக்காகும். எதிர்வரும் 18 மாதங்களில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளன என்றும் பிரமர் அங்கு மேலும் தெரிவித்தார்.
2020ம் ஆண்டளவில் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவது இலக்காகும் என அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
விவசாயம், கைத்தொழில் உட்பட பல்வேறு துறைகளுக்கும் 15 திட்டங்களின் கீழ் 75 மில்லியன் ரூபா வரையான சலுகைக் கடன் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிராமிய மக்கள் வட்டிக்கு பணம் கொடுப்போரிடம் சிக்கியிருக்கிறார்கள் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டினார். இதனால் மக்கள் கடன் சுமையைத் தளர்த்த இந்தத் திட்டம் உதவும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

