தென் கொரியாவுக்கு ’பி1-பி’ ரக போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியது

தென் கொரியாவுக்கு ’பி1-பி’ ரக போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியது

 

வடகொரியாவின் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து, தென்கொரியாவுக்கு ஓலியை விட வேகமாக பறந்து குண்டு வீசும் ஆற்றல் வாய்ந்த போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறும் விதத்தில் வடகொரியா தொடர்ந்து அடாவடியாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியா கடந்த 9 ஆம் தேதியும் 5-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி, அது வெற்றி கண்டிருப்பதாக அறிவித்துள்ளது.

இதுவரை வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனைகளில் இந்த சோதனைதான் மிகவும் சக்தி வாய்ந்தது என சொல்லப்படுகிறது.

வடகொரியாவின் இந்த செயல், உலக நாடுகளின் கண்டனத்துக்கு வழி வகுத்தது. இந்த நிலையில் வடகொரியாவின் அண்டை நாடான தென் கொரியாவுக்கு அமெரிக்கா 2 போர் விமானங்களை அனுப்பியது. இந்த விமானங்கள் பி1பி ரகத்தை சேர்ந்தவை. இவை ஒலியை விட வேகமாக பறந்து சென்று குண்டு வீசும் ஆற்றல் வாய்ந்த சூப்பர்சோனிக் வகை போர் விமானங்கள் ஆகும்.

இந்த போர் விமானங்களின் பின்னால் அமெரிக்கா மற்றும் தென்கொரிய விமானங்கள் பாதுகாப்புக்கு சென்றன. அமெரிக்காவின் போர் விமானங்கள், ஓசான் விமான தளத்தின் மீது பறந்ததை முன்னணி செய்தி நிறுவனத்தின் புகைப்பட கலைஞர் பார்த்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அந்த விமானதளம், வடகொரியா எல்லையில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ளது. தென்கொரியாவுக்கு போர் விமானங்களை அனுப்பி தனது ஆதரவை தெரிவிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், அந்த நாட்டின் போர் விமானங்கள் அங்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தென் கொரியா மீது பறந்த அந்த போர் விமானங்கள் அங்கு தரை இறங்காமல், அமெரிக்காவால் நிர்வகிக்கப்படுகிற குவாம் ஆன்டர்சன் விமானப்படை தளத்துக்கு திரும்பி விடும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கொரிய தீபகற்ப பகுதியில் எப்போதெல்லாம் பதற்றம் நிலவுகிறதோ அப்போதெல்லாம் இதேபோன்று அமெரிக்க போர் விமானங்கள் அங்கு செல்வது வழக்கமாகி வருகிறது. வடகொரியாவை போன்று தென் கொரியாவில் அணு ஆயுதங்கள் இல்லை. அணு ஆயுதங்களுக்கு அந்த நாடு தனது நட்பு நாடான அமெரிக்காவை சார்ந்து நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *