கடந்த 2015ஆம் ஆண்டில் ஊழல்வாதிகளை தண்டிக்க மக்கள் ஒரு ஆணையை வழங்கினர். ஆனால் அந்த பொறுப்பை சரியாக நிறைவேற்றாததால் மக்களினால் இந்த தேர்தலில் தண்டிக்கப்பட்டுள்ளோம் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை, அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையகத்தில் சாட்சியமொன்றை வழங்குவதற்காக அவர் முன்னிலையாகி இருந்தாரர்
அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களை சந்தித்த மங்கள சமரவீர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ஊழல்வாதிகளைத் தண்டிக்க கடந்த 2015 ஆம் மக்கள் தங்களது ஆணையை எங்களுக்கு வழங்கி இருந்தனர்.
எனினும் அப்போதேய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் அந்த பணியை சரியாக முன்னெடுக்க முடியவில்லை. அதுதான் உண்மை.
மேலும், அன்றைய காலத்தில் மைத்திரியே ஜனாதிபதியாக இருந்தார் துரதிர்ஷ்டவசமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் ஜனாதிபதியாக முடியவில்லை.
எங்களது அரசாங்கம், நாட்டை சரியான திசையை நோக்கி கொண்டுச் சென்றபோதிலும், அதனை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை.
அத்துடன் எமது ஆட்சியில் சிறந்த வேலைத்திட்டங்கள் அதிகளவு முன்னெடுக்கப்பட்டன. ஆனால் மக்கள் கோரிய திருடர்களை சிறையில் அடைக்க முடியவில்லை.
எனினும் அது எனது வேலை அல்ல. அது சட்டத்தால் செய்யப்பட வேண்டிய ஒன்று. இவ்வாறு சட்டத்தினால் முன்னெடுக்கபடாத செயற்பாட்டுக்கு மக்கள் எங்களை குறை கூறுகிறார்கள்.
எது எவ்வாறாயின் எங்களது அரசாங்கம் திருடர்களைப் பிடிப்பதில் தோல்வியுற்றது. இதேவேளை ஜனாதிபதி சிறிசேனவிடமே பாதுகாப்பு அதிகாரங்கள் இருந்தன. எனவே அவ்விடயங்களுக்கு நாம் பொறுப்பு கூறமுடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.













