உயிருடன் இருக்கும் போது காதல் ஜோடிகளை பிரித்த உறவினர்கள், தற்கொலை செய்து இறந்த பிறகு அவர்களின் சிலைகளுக்கு திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் குஜராத் மாநிலம் டாபி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (25) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சனா (22) என்பவரும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அப்போது, “எனக்கு நல்ல வேலை கிடைத்த பிறகு நமது காதல் குறித்து வீட்டில் சொல்லலாம்” என ரஞ்சனாவிடம் கணேஷ் கூறியுள்ளார்.
அதன்படியே, இன்ஜினியரான கணேஷுக்கு ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. அதன் பிறகு, இருவரும் தங்களின் காதல் விவகாரம் குறித்து வீட்டில் கூறியுள்ளனர். ஆனால், இரு வீட்டாரும் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தங்கள் பேச்சை மீறி திருமணம் செய்து கொண்டால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிப்பதால், தாங்கள் திருமணம் செய்து கொள்வது முடியாத காரியம் என உணர்ந்த கணேஷும் ரஞ்சனாவும், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஊருக்கு வெளியே உள்ள ஒரு மரத்தில் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து, கணேஷ் மற்றும் ரஞ்சனா வீட்டில் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்தன. பெரும் தொழில் நஷ்டமும் ஏற்பட்டது. மேலும், அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கனவுகளிலும் கணேஷ், ராஞ்சனாவின் ஆவிகள் வந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆவிகளின் சேட்டையால் பயந்து போன இரு வீட்டாரும் ஜோதிடர்களை பார்த்துள்ளனர். அப்போது அனைத்து ஜோதிடர்களும் சொல்லி வைத்தது போல, இளம் ஜோடிகள் நிராசையால் உயிரிழந்திருப்பதாகவும், அவர்களை சிலைகளாக வடித்து திருமணம் செய்து வைத்து விடுமாறும் கூறியுள்ளனர்.
அதன்படியே, கடந்த வாரம் இரு வீட்டாரும் சேர்ந்து உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து, கணேஷ் – ராஞ்சனா ஜோடிகளின் சிலைகளை உருவாக்கி அதற்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தனர்.
இதுகுறித்து இரு குடும்பத்தினரும் கூறுகையில், ‘இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்ததை நாங்கள் அறிவோம். அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவும் இதைச் செய்தோம்’ என்று தெரிவித்தனர்.













