முழுமையாக தடுப்பூசி பெறாதவர்களை பொது இடங்களுக்கு நுழைவதை தடுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, அவ்வர்த்தமானியை ரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று புதன்கிழமை (2) தக்கல் செய்யப்பட்டது.
திறந்த பல்கலைக்கழகத்தின் சுதேச வைத்திய விஞ்ஞான பிரிவின் விரிவுரையாளரான எப்.எம். ஜயதில இம்மனுவை தக்கல் செய்துள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே, சன்ன ஜயசுமன, சுகாதர சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, பொலிஸ் மா அதிபர் , சட்ட மா அதிபர் உள்ளிட்ட 12 பேர் இம்மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
1897 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தொற்று நோய் காரணமாக தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் (1954 ஆம் ஆண்டு திருத்தம்) கீழ் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி கட்டளைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாகவும், அதற்கமைய, ஏப்ரல் 30 முதல் முழுமையாக தடுப்பூசி பெறாதவர்களை பொது இடங்களுக்கு நுழைவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனூடாக முழுமையான தடுப்பூசி ஏற்றாதவர்கள் பாதையில் செல்வது, பொது போக்குவரத்தை பயன்படுத்துவது போன்றவையும் தடுக்கப்படுவதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் சட்ட ரீதியாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை தான்றோண்டித்தனமாக பயன்படுஇத்தி இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாகவும், அதனால் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் கோரியுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]