ட்ரம்பின் பிரித்தானிய விஜயம் ஒத்திவைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டமிடப்பட்ட பிரித்தானியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் பிற்போடப்பட்டுள்ளது.
ட்ரம்பின் வருகைக்கு நாடாளுமன்றத்தில் கிளம்பிய எதிர்ப்பு மற்றும் பொதுமக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் முன்னெடுக்கப்படலாம் என்ற அச்சங்கள் காரணமாகவே திட்டமிடப்பட்ட அரச பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜுன் மாதத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த விஜயம், இரு நாடுகளின் அரச அலுவலகங்களிடையே ஏற்படுத்தப்பட்ட பரஸ்பர உடன்படிக்கைக்கு அமைவாக ஒக்டோபர் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ட்ரம்ப், வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏழு முஸ்லிம்கள் நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை குறித்த சர்ச்சை தணியும்வரை பிரித்தானிய விஜயத்திற்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.