ஜேர்மனியில் 10 நாளுக்கான உணவு, குடிநீர் சேமிக்க அறிவுறுத்தல்: வெளியே கசிந்த பாதுகாப்பு திட்டம்
ஜேர்மனியில் 10 நாளுக்கான உணவு மற்றும் குடிநீரை பொதுமக்கள் சேமித்து வைக்கும்படியான பாதுகாப்புத்துறையின் திட்டமொன்று வெளியே கசிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் தீவிரவாத அச்சுறுத்தல், மிக கொடுமையான அழிவு உள்ளிட்ட சம்பவங்கள் நேரிட்டால் பொதுமக்கள் தங்களை உயிர் காத்துக்கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு அதிகாரிகள் புது திட்டமொன்றை வடிவமைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதன்படி பொதுமக்கள், அசம்பாவித சம்பவங்களை எதிர்கொள்ளும் பொருட்டு 10 நாளுக்கான உணவு மற்றும் போதிய தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும் என 69 பக்கங்கள் கொண்ட வரைவு ஒன்றை உள்விவகாரத்துறை அமைச்சகம் தொகுத்துள்ளது.
இதுமட்டுமின்றி எச்சரிக்கை சமிஞ்ஞைகள், கட்டிடங்களுக்கு உயரிய பாதுகாப்பு ஏற்பாடு, சம்பவம் நடைபெற்றதும் உடனடியாக குறிப்பிட்ட பகுதிக்கு சென்று சேரும்படியான மருத்துவ சேவை உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து அந்த வரைவு தொகுப்பில் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வரைவு குறித்த வாக்கெடுப்பு வரும் புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற இருப்பதாகவும் உள்விவகாரத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள சூழலில் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த வரைவு குறித்து இதுவரை அரசு சார்பாக எந்தவித அறிக்கையும் பொதுமக்களுக்கு விடுக்கப்படவில்லை. ஊடகங்களில் மட்டுமே இந்த வரைவு குறித்தும் அமைச்சகத்தின் பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
ஜேர்மனியில் பனிப்போர் முடிவுக்கு வந்தபின்னர், முதன்முறையாக இதுபோன்ற ஒரு பாதுகாப்பு குறித்த திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.எஸ் அமைப்பு ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட 2 தாக்குதல்கள் மற்றும் வணிக வளாக துப்பாக்கிசூடு சம்பவங்கள் அரசை இதுபோன்ற ஒரு திட்டத்தை உருவாக்க நிர்பந்தித்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.