அதிமுகவின் பிரபல பேச்சாளராக இருந்த நடிகை விந்தியா ஜெயலலிதா இறந்து 6 மாதங்களுக்கு பிறகு அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அஞ்சலி செலுத்திய பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவரிடம், இவ்வளவு நாட்களாக கட்சியை விட்டு ஒதுங்கி இருந்தீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த விந்தியா, அம்மாவின் மரணம் எனது தலையில் இடி வந்து விழுந்தது போன்று இருந்தது, என்னால் அதிலிருந்து மீண்டு வர இயலவில்லை.
தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சோகத்தில் இருந்து மீண்டு வந்துள்ளேன் என கூறியுள்ளார்.
மேலும், அதிமுகவின் இரு அணிகளும் இணைவதில் எனக்கு மிகவும் சந்தோஷம், ஆனால் இணைவதற்கான நோக்கம் மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.
பசு கூட கூட்டமாக இருந்தால் சிங்கத்தால் வேட்டையாட முடியாது, சிங்கம் தனியாக இருந்தால் சிறுநரி கூட வேட்டையாடும் என்று தனக்கு உரித்தான பாணியில் பஞ்ச் டயலாக் ஒன்றை கூறியுள்ளார்.
கூடிய சீக்கிரத்தில் அதிமுக பேச்சாளராக உங்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.
அதிமுக கட்சியின் பிரபல பேச்சாளரான நடிகை விந்தியா, தேர்தல் நேரங்களில் பஞ்ச் டயலாக் மூலம் எதிர்கட்சியினரை விமர்சிப்பதில் கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.