கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
தமக்கு வேண்டியவர்களை விடுவிப்பதற்காக ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தும் நடைமுறையை நீக்கவேண்டும் என்ற கருத்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கன்னொருவையில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.
சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட வேண்டாம்
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் லால் காந்த,
”நாட்டில் சட்டம் என்ற ஒன்று இருக்கின்றது. அச்சட்டத்தை தராதரம் பார்த்து நடைமுறைப்படுத்த முடியாது. சட்டத்தை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துவதற்காகவே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆணை வழங்கியுள்ளனர்.

அதற்கமையவே நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட வேண்டாம் என மக்களிடமும் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் எனத் தாமும் நீண்டகாலமாக கலந்துரையாடி, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தேன்.
தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் மக்களுக்குத் தமது கருத்துக்களைத் தெரிவிக்க முழு உரிமை உள்ளது.
மேலும் இது ஒரு ஜனநாயக நாடு என்பதால் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும், மனுக்களைச் சமர்ப்பிக்கவும் கலந்துரையாடல்களை நடத்தவும் முடியும்” என கூறினார்.












