எமது நாட்டிலே ஜனநாயக உரிமை மறுக்கப்பட்ட எமது தமிழ் இனம் அழிக்கப்பட்ட நாளாகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18ஐ பார்க்க வேண்டி இருக்கின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் நிகழ்வு இன்று காரைதீவு கடற்கரை காளி கோயில் அருகாமையில் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வினை காரைதீவு தமிழரசு கட்சியின் பற்றாளர்களும், அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களும் இணைந்து நடத்தியிருந்தனர்.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்
தமிழ் இனத்திற்கு தொன்மை மிக்க பல வரலாறுகள் உண்டு. கல்வியிலும் சரி, ஆயுதரீதியான போராட்டங்களிலும் சரி பல சாதனைகளை படைத்த ஒரு மகத்தான இனம்தான் தமிழ் இனம். அப்படிப்பட்ட வலுவான இனத்தின் உயிர்களை இந்த நாட்டை ஆண்ட அரசுகள் திட்டமிட்டு 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலிலே கொன்று குவித்தது.
இந்த நாட்டிலே தமிழனாக பிறந்த ஒரே காரணத்தினால் தான் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை கொல்லப்பட்டிருக்கின்றார்கள் இதுதான் தமிழ் இனத்தின் நிலைமை.
இன்று உலக நாடுகள் அனைத்திலும் பல இனமக்கள் சிறுசிறு குழுக்களாக தீவுகளிலே வாழ்கின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் சர்வதேச சட்டங்கள், நிபந்தனைகள் எல்லாம் அவர்களது உயிரை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் எமது நாட்டிலே அந்த ஜனநாயக உரிமை மறுக்கப்பட்ட எமது தமிழ் இனம் அழிக்கப்பட்ட நாளாகவே இன்றைய இந்த நாளை பார்க்க வேண்டி இருக்கின்றது.
அது மாத்திரம் அல்ல இந்த நாட்டிலே தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர், கடத்தப்பட்டோர் என்ற அடிப்படையிலும் இன்றும் மக்கள் வீதிகளில் தனது கணவனை, சகோதரிகளை, பிள்ளைகளை, உறவுகளை பறிகொடுத்தவர்களாக அதற்கான தீர்வினை வேண்டி போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.
ஆனால் இந்த அரசு அதனை விடுத்து பாராமுகமாகவே இருந்து வருகின்றது. 1945ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையில் 28 வீதமான தமிழர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றார்கள் என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் இன்று தமிழர்களின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வினை பெற வேண்டும் என்பதற்காக எமது தலைமைகள் அல்லும் பகலும் உழைத்து கொண்டு வருகின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம், காணி விடுவிப்பு தொடர்பான போராட்டம் என இரண்டு துருவங்களில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இனிமேல் இந்த நாட்டிலே எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் எந்த படுகொலைகளும் நிகழாத வண்ணம் தங்களுடைய அரசியலை முன்னெடுக்க வேண்டும். தமிழர்களாகிய நாங்கள் இந்த நாட்டிலே பல உயிர்களை, பல இடங்களை இழந்து இன்றும் அதனை பெறுவதற்கான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றோம்.
இனிமேல் இழப்பதற்கு எங்களிடம் எதுவுமே இல்லை. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மாத்திரம் அல்ல இலங்கையில் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் அதற்கான சான்றுகள் இருக்கின்றது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட உறவுகளுக்கு கூட எந்த விதமான வாழ்வாதார திட்டங்கள், அவர்களது எதிர்கால திட்டங்கள் எதுவுமே இதுவரை இந்த அரசினால் முன்னெடுக்கப்படாத நிலைமைதான் இருந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலைமை மாற்றமடைய வேண்டும் இதற்காக ஒவ்வொரு பிரதேசத்திலும் இருக்கின்ற தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து செயற்பட வேண்டும் என கலையரசன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன், அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் தலைவி த.செல்வராணி, உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.