நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் செப்டெம்பர் மாதம் சிறிய அளவிலான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி சர்வதேச சுற்றுலாப் பயணிகள் செப்டெம்பர் மாதத்தில் மொத்தம் 158,557 வருகை தந்துள்ளதோடு, இது 2025 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.26% வீழ்ச்சியை காட்டுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி சபையின் தகவல்களுக்கு அமைவாக, இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அவ்வாறு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் 51,931 பயணிகள் எனவும் , இது செப்டெம்பர் மாதத்தில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 32% எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சீனாவிலிருந்து 11,722 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அதனை தொடர்ந்து, அவுஸ்திரேலியாவிலிருந்து 10,951 சுற்றுலாப் பயணிகளும், பிரித்தானியாவிலிருந்து 10,738 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியிலிருந்து 7,277 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
அதேவேளை, ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை நாட்டுக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,693,679 ஐ எட்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.













