நாட்டில் தற்போது சிறை தண்டனை அனுபவித்துவரும் சிறைக்கைதிகளில் நூற்றுக்கு எண்பது வீதமானவர்கள் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்களாகும்.
ஆகையால் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்றி போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டில் வாழ்வதற்கும்,அத்தகையதொரு அதிர்ஷ்டமிக்க சூழலை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் விடுத்துள்ள விஷேட செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,புத்தாண்டு பிறப்புடன் எம்முள் பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்படுவதுடன், பல்வேறு விடயங்கள் பற்றி பல இலக்குகளையும் நாம் ஏற்படுத்திக் கொள்கின்றோம்.
இப்புத்தாண்டு பிறப்புடன் குறிப்பாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகச் சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். நாம் அதிர்ஷ்டமிக்க நாடொன்றிலேயே வாழ்ந்து வருகிறோம்.
அத்தோடு இது இயற்கை வளங்கள் நிறைந்த நாடாகவே இருக்கின்றது. ஆகையால் இந்த அதிர்ஷ்டமிக்க நாட்டில் வாழும் உங்களுக்கும் எனக்கும் நம் அனைவருக்கும் பிறந்திருக்கும் இந்த புத்தாண்டு அனைத்து வகையிலும் அதிர்ஷ்டமிக்கதாக ஆக்குவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் வினைத்திறன் மிக்க வகையிலும் செயற்பட வேண்டும்.

