அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் வியாழக்கிழமை (09) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய சுழல்பந்துவீச்சாளர் ரவீந்த்ர ஜடேஜா தனது இடது கை ஆள்காட்டி விரலில் களிம்பு பூசியது சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
பந்தை சேதப்படுத்தும் நோக்கில் ஒருவகை களிம்பை ஆள்காட்டி விரலில் ஜடேஜா பூசினாரா என்ற சந்தேகம் சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டது.
அப் போட்டியில் அவர் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்து அவுஸ்திரேலியாவை 177 ஓட்டங்களுக்கு சுருட்டியதாலேயே இந்த சந்தேகம் எழுந்தது.
இந்தியாவுக்கும் ஹொங்கொங்குக்கும் இடையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் உபாதை காரணமாக சிகிச்சையுடன் ஓய்வு பெற்றுவந்த ஜடேஜா, 5 மாதங்களின் பின்னர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து பந்துவீச்சில் அசத்தினார்.
எவ்வாறாயினும் ஜடேஜா வலி நிவாரணி களிம்பையே தனது ஆள்காட்டி விரலில் பூசியதாக முதல் நாள் போட்டி முடிவில் பொது மத்தியஸ்தர் அண்டி பைக்ரொவ்டிடம் இந்திய அணி தெரிவித்தது.
ஜடேஜா தனது பந்துவீசும் கையில் ஆள்காட்டி விரலில் ஒருவகை களிம்பு பூசுவது தொடர்பான வீடியோ காட்சி குறித்து பொதுமத்தியஸ்தர் அண்டி பைக்ரொவ்டிடம் ஜடேஜாவும் ரோஹித் ஷர்மாவும் விளக்கிக் கூறினர்.
போட்டியின் ஒரு கட்டத்தில் பந்துவீசுவதற்கு முன்பதாக ஜடேஜா ஒருவகை களிம்பை எடுத்து தனது இடது கை ஆள்காட்டி விரலில் வலது கையால் பூசுவது வீடியோவில் பதிவாகியிருந்தது. ஆனால், பந்து அவர் கையிலிருந்த எந்த சந்தர்ப்பத்திலும் பந்தின்மீது அந்த களிம்பை அவர் பூசியதாக வீடியோவில் பதவாகவில்லை.
அவுஸ்திரேலியா 120 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மானுஸ் லபுஸ்சான், மெட் ரென்ஷோ, ஸ்டீவன் ஸ்மித் ஆகிய மூவரின் விக்கெட்களை வீழ்த்திய பின்னரே ஜடேஜா, வலி நிவாரணி களிம்பை பூசியுள்ளார்.
இது தொடர்பாக முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த உடனேயே ஜடேஜாவின் செயல் தொடர்பான வீடியோ காட்சி ஜடேஜா, அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, அணி முகாமையாளர் ஆகியோருக்கு காட்டப்பட்டது.
இது தொடர்பாக அறிந்துகொள்வதற்காகவே வீடியோ காட்சி காட்டப்பட்டதாக பைக்ரொவ்ட் மூலம் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் ஜடேஜாவுக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் விமர்சிக்கப்பட்ட போதிலும் அது தொடர்பாக போட்டி பொது மத்தியஸ்தரின் கவனத்திற்கு அவுஸ்திரேலிய அணி கொண்டு வரவில்லை.