டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கையான 27 ஓட்டங்களுக்கு சரிந்ததுடன் அவுஸ்திரேலிய வேகபந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டாக் 15 பந்துகளில் 5 விக்கெட்களைக் கைப்பற்றி வேகமாக 5 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு உரித்தானார்.
துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த மிச்செல் ஸ்டாக், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பந்தவீச்சுக்கான அபூர்வ சாதனையை நிலைநாட்டினார்.
ஜெமெய்க்கா கிங்ஸ்டன் சபினா பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 176 ஓட்டங்களால் இலகுவாக வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா தொடரை 3 – 0 என முழுமையாக கைப்பற்றியது.
அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 204 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 14.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 27 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இங்கிலாந்துக்கு எதிராக ஆக்லண்டில் 1955ஆம் ஆண்டு நியூஸிலாந்து பெற்ற மிகக் குறைந்த 26 ஓட்டங்கள் என்ற மொத்த எண்ணிக்கையை விட ஒரு ஓட்டம் அதிகமாக மேற்கிந்தியத் தீவுகள் பெற்றது.
மிச்செல் ஸ்டார்க் தனது முதலாவது ஓவரில் 3 விக்கெட்களையும் 3ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளில் 3 விக்கெட்களையும் வீழ்த்தியதன் மூலம் 15 பந்துகளில் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இன்னிங்ஸில் ஒன்றில் வேகமாக (குறைந்த பந்துகளில்) 5 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை மிச்செல் ஸ்டாக் நிலைநாட்டினார்.
மேலும் மேற்கிந்தியத் தீவுகளின் இரண்டாவது இன்னிங்ஸில் 7 வீரர்கள் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 7 வீரர்கள் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தது இதுவே முதல் தடவையாகும்.
மேற்கிந்தியத் தீவுகளின் இரண்டாவது இன்னிங்ஸில் மிக்காய்ல் லூயிஸின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் மிச்செல் ஸ்டாக், 400 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்திசெய்தார். மிச்செல் ஸ்டாக் 400ஆவது விக்கெட்டை தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் கைப்பற்றியது விசேட அம்சமாகும்.
இதேவேளை, ஸ்டாக்குக்கு பக்கபலமாக பந்துவிசிய ஸ்கொட் போலண்ட், ஹெட் – ட்ரிக் முறையில் விக்கெட்களைக் கைப்பற்றி சாதனை படைத்தார். அவுஸ்திரேலியா சார்பாக டெஸ்ட் போட்டியில் ஹெட் ட்ரிக் சாதனை புரிந்த 10ஆவது பந்துவீச்சாளர் போலண்ட் ஆவார்.
மூன்று நாட்களுக்குள் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் சகலரும் ஆட்டம் இழந்த நான்கு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 516 ஓட்டங்கள் மாத்திரமே பெறப்பட்டது. அத்துடன் இந்தப் போட்டியில் ஒருவர் கூட அரைச் சதம் பெறவில்லை.
எண்ணிக்கை சுருக்கம்
அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 225 (ஸ்டீவன் ஸ்மித் 48, கெமரன் க்றீன் 46, பெட் கமின்ஸ் 24, ஷமார் ஜோசப் 33 – 4 விக்., ஜஸ்டின் க்றீவ்ஸ் 56 – 3 விக்., ஜேடன் சீல்ஸ் 59 – 3 விக்.)
மேற்கிந்தியத் தீவுகள்: 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 143 (ஜோன் கெம்பெல் 36, ஷாய் ஹோப் 23, ஸ்கொட் போலண்ட் 34 – 3 விக்., பெட் கமின்ஸ் 24 – 2 விக்., ஜொஷ் ஹேஸ்ல்வூட் 32 – 2 விக்.)
அவுஸ்திரேலியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 121 (கெமரன் க்றீன் 42, ட்ரவிஸ் ஹெட் 16, அல்ஸாரி ஜோசப் 27 – 5 விக்., ஷமார் ஜோசப் 34 – 4 விக்.)
மேற்கிந்தியத் தீவுகள் – வெற்றி இலக்கு 204 ஓட்டங்கள் – 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 27 (ஜஸ்டின் க்றீவ்ஸ் 11, மிச்செல் ஸ்டாக் 7.3 – 4 – 9 – 6 விக்., ஸ்கொட் போலண்ட் 2 – 3 விக்.)
ஆட்டநாயகன்: மிச்செல் ஸ்டாக் (9 விக்கெட்கள்)
தொடர்நாயகன்: மிச்செல் ஸ்டாக் (15 விக்கெட்கள்)
