சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தொடர்ந்தும் கச்சா எண்ணெய் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கோரியும், எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் 28 ஆம் திகதி செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
தமது பகல் நேர உணவு வேளையின்போது முன்னெடுகப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டமானது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சாந்த வெட்டகெட்டிய கூறுகையில்,
“பல எண்ணெய் நிரப்பு நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் உள்ளடக்கம் என்னவென்று எங்களுக்கு இதுவரை தெரியவில்லை. இது குறித்து ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்போம்,” என்றார்.
சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் வழங்கினால், நாட்டில் இன்று மோசமடைந்துள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க முடிவதுடன், அத்தியாவசிய சேவைகளுக்கும் எரிபொருளை வழங்க முடியும் என்றும் இலங்கை சுதந்திர ஊழியர்கள் சங்கத்தின் உப தலைவர் சமிந்த பத்திரன தெரிவித்தார்.