சட்டசபையில் இன்று பலப்பரீட்சை! பன்னீருக்கு மேலும் 16 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு?
தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற, ஓ.பி.எஸ்., – எடப்பாடி அணியினர் இடையே, இன்று சட்டசபையில் பலப்பரீட்சை நடைபெறுகிறது.
அதனால், 1988ல் நடந்த வன்முறை காட்சிகள் மீண்டும் அரங்கேறுமோ என, பதற்றம் நிலவுகிறது.
இதற்கிடையில், கடைசி நேரத்தில், 16 எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், பரபரப்பு அதிகரித்துள்ளது.
ஜெ., மறைவை தொடர்ந்து, முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.
அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார். கட்சியை கைப்பற்றியதோடு, ஆட்சியையும் கைப்பற்ற முடிவு செய்தார்.
முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை, வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்தார். அ.தி.மு.க., சட்டசபை கட்சித் தலைவராகி, முதல்வராக முயற்சித்தார்.
அவருக்கு எதிராக பன்னீர்செல்வம், போர்க்கொடி துாக்கினார்.இச்சூழ்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா குற்றவாளி என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், அவரின் முதல்வர் கனவு தகர்ந்தது.
எனினும், கட்சியும், ஆட்சியும், தன் குடும்பத்தினர் கையை விட்டு போய்விடக் கூடாது என, முடிவு செய்த சசிகலா, தன் விசுவாசியான, எடப்பாடி பழனிசாமியை, முதல்வராக்க முன்வந்தார்.
அவரது திட்டப்படி, அ.தி.மு.க., சட்டசபை கட்சித் தலைவரானார் எடப்பாடி.ஆட்சி அமைக்க, கவர்னரிடம் உரிமை கோரினார். அதற்கு அனுமதி அளித்த கவர்னர், ,15 நாட்களுக்குள், சட்டசபையில் பெரும் பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். அதை ஏற்று, எடப்பாடி பழனிசாமி, முதல்வராக பொறுப்பேற்றார்.
பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, இன்று காலை, 11:00 மணிக்கு, சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது.
இதேபோல, எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வானது, ஜானகி அணி, ஜெ., அணி என, பிளவுபட்டது. முதல்வராக இருந்த ஜானகி பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தபோது, கடும் அமளி ஏற்பட்டது.
அதே போன்ற வன்முறை காட்சி கள், இன்றும் அரங்கேறுமோ என்ற பதற்றம் எழுந்துள்ளது.
சட்டசபையில், தற்போது ஒரு காலியிடம் போக, 233 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அ.தி.மு.க.,விற்கு, 135; தி.மு.க.,விற்கு, 89; காங்கிரசுக்கு எட்டு; முஸ்லிம் லீக்கிற்கு, ஒரு எம்.எல்.ஏ., உள்ளனர்.
தி.மு.க., – எம்.எல்.ஏ.,க் கள், இடைப்பாடிக்கு எதிராக ஓட்டளிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அதன் கூட்டணி கட்சியான, காங்., மற்றும் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.,க்களும் எதிராக ஓட்டளிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களில், பன்னீர் செல்வம் மற்றும்அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க் கள், 11 பேர் உள்ளனர். அவர்களும் தீர்மானத்திற்கு எதிராக ஓட்டளிப்பர். மீதமுள்ள, 124 எம்.எல்.ஏ.,க்களில், ஓட்டெடுப்பு முடிவில், சமநிலை ஏற்பட்டால் மட்டுமே, சபாநாயகர் ஓட்டளிப்பார்.
எனவே, மீதமுள்ள, 123 எம்.எல்.ஏ.,க்களில், எட்டு எம்.எல்.ஏ.,க்கள், தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்தாலே, அரசு கவிழ்ந்து விடும்.
இச்சூழலில், 16 எம்.எல்.ஏ.,க்கள் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக, தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளிக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு, பெரும்பான்மையை நிரூபிக்க, 117 ஓட்டுகள் தேவை. ஒரு வேளை, எம்.எல்.ஏ.,க்கள் சிலர், ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் இருந்தால், பழனிசாமி கொண்டு வரும் நம்பிக்கை தீர்மானத்திற்கு, எதிர்ப்பை விட ஆதரவு அதிகம் கிடைக்கும் நிலை ஏற்படலாம்.
அப்போது, தீர்மானம் நிறைவேறி யதாக அறிவிக்கப்படும்.ஆனால், 117 ஓட்டுகள் கிடைக்காவிட்டால், பொறுப்பேற்பதற்கு முன், தி.மு.க., நடுநிலை வகிக்க, முடிவு செய்திருந்தது.
சென்னையில், நேற்று நடந்த தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், தீர்மானத்திற்கு எதிராக, ஓட்டளிக்க முடிவு செய்தனர். அதன் கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கும் எதிர்த்து ஓட்டளிக்க, முடிவு செய்துள்ளன. இது,சசிகலா தரப்பினரிடம், பீதியை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்க்கட்சியினரும், பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.
இதை ஏற்பதும், ஏற்காததும் சபாநாயக ருடைய உரிமை. எனவே, குரல் ஓட்டெடுப் புக்கே வாய்ப்பு அதிகம்.அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் மாறி ஓட்டளித்தால், சசிகலா தரப்பினர் ரகளையில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது.
எனவே, சட்டசபை வளாகத் தில், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கருணாநிதிவர மாட்டார்!அ.தி.மு.க., அரசின் ஆயுளை முடிவு செய்ய உள்ள,
இன்றைய சட்டசபை கூட்டத்தில், தி.மு.க., தலைவர், உடல்நலக் குறைவு காரண மாக, பங்கேற்க மாட்டார் என, தெரிகிறது.
பன்னீருக்கு மேலும் 16 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு?
பன்னீர்செல்வத்திற்கு, மேலும், 16 எம்.எல்.ஏ.,க் கள் ஆதரவு தர முன்வந்துள்ளதாக கூறப்படு கிறது.இடைப்பாடி பழனிசாமி, முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவின்படி, அவர் தன் பலத்தை நிரூபிப்பதற்காக, சட்டசபையில், இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு கோருகிறார்.
இதற்காக, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் பலரும், கூவத்துாரில் உள்ள சொகுசு விடுதியில், ஒரு வாரத்திற்கும் மேலாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
அதேநேரத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், ‘எம்.எல்.ஏ.,க்கள் மனசாட்சி யுடன் ஓட்டளிக்க வேண்டும்’ என, கூறியுள் ளார்.
இதற்காக, பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும், கூவத்துாரில் உள்ள எம்.எல்.ஏ.,க் களுடன் ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர்.
பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மாறியதால், கல்வித்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட, பாண்டியராஜன், இதில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு முதல், பாண்டியராஜன் தரப்பினர், எம்.எல்.ஏ.,க்களை, மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.
இப்பேச்சில், திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 16 எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தர முன்வந்துள் ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. –