சசிகலாவுக்கு முன்னால் இருக்கும் 3 முக்கிய தடைகள்!
சசிகலாவிடம் போதிய எம்.எல்.ஏக்கள் இருக்கலாம். ஆனால் அவர் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு மூன்று முக்கிய சட்ட சிக்கல்களைத் தாண்டியாக வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் முதலமைச்சர் கனவு நனவாக வேண்டும் என்றால் அவருக்கு முன்னால் இருக்கும் 3 முக்கிய தடைகளை கடந்து வர வேண்டும்.
முதல் பெரும் தடை சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு. அடுத்த வாரத் தொடக்கத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ளது. அதில் அவர் ஜெயித்தாக வேண்டும்.
இதில் அவர் தண்டிக்கப்பட்டால் அவர் சிறைக்குச் செல்ல வேண்டி வரும். அதை விட முக்கியமாக அவர் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்படும். தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு கால சிறைத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தால் அவரால் 10 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
அடுத்து அவரை சட்டசபை அதிமுக கட்சித் தலைவராக தேர்வு செய்ததிலும் கூட சட்ட சிக்கல்கள் உள்ளதாம். இந்த சட்டத் தடையையும் அவர் தாண்டியாக வேண்டும். சட்டசபையில் உறுப்பினராக இல்லாதவர் எப்படி சட்டசபை கட்சித் தலைவராக முடியும் என்று சட்ட நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அடுத்து, அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக அவரைத் தெரிவு செய்ததிலும் சட்ட விதி மீறல் உள்ளது என கூறப்படுகிறது. இதைத் தேர்தல் ஆணையம் முறையற்றது என்று கூறி விட்டது.
இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. கட்சியின் துணை விதிப்படி அவரால் கட்சியில் எந்தப் பதவிக்கும் வர முடியாது. எனவே சசிகலா இந்த பிரச்சினையயும் தாண்டியாக வேண்டும்.
இதையெல்லாம் தாண்டி வந்தால் மட்டுமே அவர் கனவு நனவாகும்.. அதுவரை அவர் இலவு காத்த கிளி போல காத்திருக்க வேண்டியதுதான் என அரசியல் நோக்கர்களின் கருத்து.