கேப்பாப்புலவு மக்களை பார்வையிட்ட தமிழ் அரசியல் தலைவர்கள்
கேப்பாப்புலவை சேர்ந்த 138 குடும்பங்கள் தமக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளையும் இராணுவத்தினர் தங்களிடம் கையளிக்க வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப்போராட்டத்தினை இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 4.00 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அங்கே சென்று உண்ணாவிரத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த பொதுமக்களை சந்திப்பதற்காக கிளிநொச்சியில் இருந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் புதுகுடியிருப்பு கேப்பாப்புலவு பிரதான வழியூடாக சென்று கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்குள் நுழைந்துள்ளார்.
பின்னர் பொதுமக்களின் போராட்ட இடத்திற்கு சென்று அங்கிருந்த அரசியல் பிரமுகர்களை சந்தித்து அவர்களுடன் இணைந்து உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்தித்துள்ளார்.
சந்தித்த அவர், அங்கு உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு சிறப்பாக அறிவுறுத்தியுள்ளார்.
நீங்கள் உங்களின் போராட்டங்களை தொடருங்கள் அதற்கு நாங்கள் முழு ஆதரவினை தருகின்றோம்.
நீங்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை கைவிட வேண்டும். ஏனெனில் எமது நாட்டில் உண்ணாவிரதம் இருந்தநிலையில் தியாகி திலீபன் அன்னைபூபதி ஆகியோரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் அவர்கள் உயிர்நீத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே உண்ணாவிரதப்போராட்டத்தின் ஊடாக எமது நிலங்களை மீட்க முடியாது. எமது உயிர்களைத்தான் இழக்க நேரிடும் என்று சிறீதரன் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் உண்ணாவிரப் போராட்டத்தினை தற்காலிகமாக கைவிடுவதாகவும் தொடர்ந்து கவனஈர்ப்பு போராட்டத்தினை தொடர்வதாக அறிவித்துள்ளனர்.
மேலும் உண்ணாவிரதிகளில் ஒருவர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று காப்பாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.