உளவு பார்த்ததாக துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள, நம் கடற்படையின் முன்னாள் அதிகாரி, குல்பூஷண் ஜாதவை சந்திக்க, அவரது மனைவி மற்றும் தாய்க்கு, ‘விசா’ வழங்கும்படி, பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
நம் கடற்படையின் முன்னாள் அதிகாரியான, குல்பூஷண் ஜாதவ், 47, பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, அந்த நாட்டு ராணுவம் கைது செய்தது. அவருக்கு துாக்கு தண்டனை விதித்து, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து, மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், தண்டனையை நிறுத்தி வைக்கும்படி, பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷண் ஜாதவை சந்திக்க, அவரது மனைவி மற்றும் தாய்க்கு, பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, வரும், 25ல், இந்த சந்திப்பு நடக்க உள்ளது.
இதற்காக, இருவருக்கும், ‘விசா’ வழங்கும்படி, டில்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்துக்கு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.










