ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராஜதந்திர பதவி வழங்கியுள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சன்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கடந்த 2009ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலையுடன் ராஜபக்சவினருக்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
லசந்த விக்ரமதுங்க உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் எந்தவிதமான தொடரும் தமக்குக் கிடையாது என ராஜபக்ச குடும்பத்தினர் ஆரம்பத்தில் இருந்தே மறுத்துவருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து தற்பொழுது வெளியாகியுள்ள தகவலின்படி, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தாய்லாந்துக்கான இலங்கை தூதரகத்தின் புலனாய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமைக்கான புதிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
பிரதான சந்தேகநபராக கருதப்படுகின்ற இராணுவ புலனாய்வு அதிகாரியான மேஜர் பண்டார புலத்வத்தவிற்கு, தாய்லாந்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் புலனாய்வு அதிகாரி மாத்திரமன்றி, இரண்டாம் செயலாளர் பதவியும் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சி இலங்கையில் இருந்த போது, வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
கோத்தபாய அனுப்பிய அக்கடிதத்தில், குறித்த நபருக்கு பதவியினை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேஜர் பண்டார புலத்வத்தவிற்கு பதவி வழங்குவதற்காக அவருடைய சுயவிபர கோவையை கூட பெற்றுக் கொள்ளவில்லை. அதற்கான சரியான ஆதாரங்களும் சிக்கியிருப்பதாக அந்த ஊடகம் வெளியிட்டிருக்கும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதவி வழங்கப்பட்ட பின்னர் வெளிவிவகார அமைச்சின் செயலாளரால் விசா நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு மேஜர் பண்டார புலத்வத்தஅங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், அந்த பதவி ரத்து செய்யப்பட்டதாகவும், குறித்த ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.