ஜப்பானில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான குத்துச்சண்டை, ஸ்கொஷ் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த மூன்று வீரர்களும் ஒரு வீராங்கனையும் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
கொழும்பில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் 22 வயதுக்குட்பட்ட பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மொஹம்மத் யூசெய்த் யஸ்மின் தனது போட்டியில் இலகுவாக வெற்றி பெற்றார். ரவிந்து ஜயநாத் குமார தனது போட்டியில் கடும் சவாலுக்கு மத்தியில் வெற்றியீட்டினார்.
அதேவேளை, ஸ்கொஷ் போட்டியில் ரவிந்து லக்சிறி, சனித்மா சினாலி ஆகியோர் வெற்றிபெற்றனர்.

இந்த நால்வரும் 16 பேர் சுற்றில் (முன்னோடி கால் இறுதி) சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளனர்.
நிஷியோ ஜிம்னாசியம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 80 கிலோ கிராம் எடைப் பிரிவு குத்துச்சண்டைப் போட்டியில் கம்போடிய வீரர் அன்வர் நஸ்ரேதினோவை எதிர்த்தாடிய யூசெய்த் யஸ்மின் 4 – 1 (29 – 28, 29 – 28, 29 – 28, 29 – 28) என்ற மத்தியஸ்தர்களின் தீர்ப்புக்கு அமைய வெற்றிபெற்றார்.
ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் துர்க்மேனிஸ்தான் வீரர் டோவ்லெட் முஹானோவிடம் கடும் சவாலை எதிர்கொண்ட இலங்கை வீரர் ரவிந்து ஜயனாத் குமார 3 – 2 (27 – 30, 28 – 29, 27 – 30, 29 – 28, 29 – 28) என்ற மத்தியஸ்தர்களின் தீர்ப்புக்கு அமைய வெற்றிபெற்றார்.
ஸ்கொஷ் போட்டிகளில் லக்சிறி, சினாலி வெற்றி
நகோயா கிஞ்சோ ஃபுட்டோ அரினா உள்ளக அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான ஸ்கொஷ் போட்டியில் மொங்கோலியா வீரர் குயென் தவாஜவ் என்பவரை எதிர்த்தாடிய ரவிந்து லக்சிறி மிகத் திறமையாக விளையாடி 3 நேர் செட்களில் (11 – 0, 11 – 1, 11 – 1) மிக இலகுவாக வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான போட்டியில் சீன வீராங்கனை ஸியி லியூ என்பவரை எதிர்த்தாடிய இலங்கையின் சனித்மா சினாலி கடும் போட்டிக்குப் பின்னர் 3 – 2 என்ற செட்கள் (11 – 9, 6 – 11, 3 -11, 11 – 4, 11 – 4) அடிப்படையில் வெற்றிபெற்றார்.
இலங்கையின் முன்னாள் ஷ்கொஷ் சம்பியன் ஷமில் வக்கீல் தனது போட்டியில் இந்தியாவின் வீர் சோத்ரனியிடம் 3 நேர் செட்களில் (8 – 11, 3 – 11, 3 – 11) தோல்வி அடைந்து வெளியேறினார்.
மேசைப்பந்தாட்டம்
பெண்களுக்கான மேசைப்பந்தாட்ட ஒற்றையர் போட்டியில் கிர்கிஸ்தான் வீராங்கனை கிர்கிஸ் அயாஸ்பெக்கோவாவை 4 – 1 என்ற செட்கள் அடிப்படையில் இலங்கை வீராங்கனை பிமந்தி சுவர்னா வெற்றிகொண்டார்.
கலப்பு இரட்டையர் மேசைப்பந்தாட்டப் போட்டியில் இந்தியாவிடம் 0 – 3 என்ற நேர் செட்களில் இலங்கை தோல்வி அடைந்தது.
கடற்கரை கரப்பந்தாட்டம்
ஹெக்கினொன் ரியோகுச்சில் கடற்கரை அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான டி குழு கடற்கரை கரபந்தாட்ட முன்னோடி சுற்றுப் போட்டியில் கத்தாரிடம் 1 – 2 என்ற செட்கள் (10 – 21, 21 – 16, 10 – 15) கணக்கில் இலங்கை (மதுசன்க பெர்னாண்டோ, சாமிக்க சேனாரத்ன) தோல்வி அடைந்தது.
துடுப்புப் படகோட்டம்
நகாராகவா சரவ்தேச படகோட்ட நீர்நிலையில் நடைபெற்ற ஆண்களுக்கான இரட்டையர் இரட்டைத் துடுப்பு படகோட்டத்தின் முதலாவது தகுதிகாண் போட்டியில் மொஹமத் நவ்ரான் – சம்ப்பத் சாகர ஜோடி கடைசியான 5ஆவது இடத்தைப் பெற்றது. 2000 மீற்றர் தூரங்கொண்ட அப் போட்டியை இலங்கை ஜோடியினர் 6 நிமிடங்கள், 48.17 செக்கன்களில் நிறைவு செய்தனர்.
10 நாடுகளைச் சேர்ந்த ஜோடியினர் இரண்டு தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றியதுடன் கடைசி இடத்தைப் பெற்ற இலங்கை ஜோடியினர் பி குழுவுக்கான இறுதிப் போட்டியில் பங்குபற்றவுளனர்.
குறைபார ஆண்களுக்கான ஒற்றயைர் இரட்டைத் துடுப்பு படகோட்டத்தின் 2ஆவது தகுதிகாண் போட்டியில் மொஹமத் நபிரன் கடைசி இடத்தைப் பெற்றார்.
2000 மீற்றர் படகோட்டப் போடடியை 8 நிமிடங்கள், 07.73 செக்கன்களில் நபிரன் நிறைவுசெய்தார்.
இரண்டு தகுதிகாண் சுற்றுகளைக் கொண்ட இப் போட்டியில் 11 வீரர்கள் பங்குபற்றியதுடன் ஒட்டுமொத்த நிலையில் நபிரன் 10ஆவது இடத்தைப் பெற்றார்.
3 x 3 கூடைப்பந்தாட்டம்
ஆண்களுக்கான ஏ குழு 3 x 3 கூடைப்பந்தாட்டத்தில் மொங்கோலியாவிடம் 11 – 21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்தது.
பெண்களுக்கான ஏ குழு போட்டியில் சீனாவிடம் 2 – 21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மிக மோசமாக இலங்கை தோல்வி அடைந்தது.
நீச்சலில் யாழினிக்கு மீண்டும் தோல்வி
டோக்கியோ நீர்நிலை நிலைய தடாகத்தில் நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் மல்லாக்கு நீச்சல் போட்டியின் முதலாவது தகுதிகாண் சுற்றில் இலங்கையின் யாழினி மினாகி ரூபசிங்க 6ஆவது இடத்தைப் பெற்றார்.
அப் போட்டியை அவர் ஒரு நிமிடம் 06.53 செக்கன்களில் நிறைவுசெய்தார்.
மூன்று தகுதிகாண் சுற்றுகளில் 27 வீராங்கனைகள் பங்குபற்றிய இப் போட்டியில் யாழினி மினாகி ஒட்டுமொத்த நிலையில் 21ஆவது இடத்தைப் பெற்றார்.
பளுதூக்கலில் கடைசி இடம்
நகோயா சிட்டி ட்ரேட் மற்றும் இண்டஸ்ட்றி சென்டர் மண்டபத்தில் நடைபெற்ற பெண்களுக்கான 49 கிலோ கிராம் எடைப் பிரிவு ஏ குழு போட்டியில் இலங்கை வீராங்கனை உபமாலிக்கா ரவிஹரி கடைசி இடத்தைப் பெற்றார்;.
ஏழு வீராங்கனைகள் பங்குபற்றிய அப் போட்டியில் ஸ்னெச் முறையில் 70 கிலோ கிராம் எடையையும் க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 91 கிலோ கிராம் எடையையும் தூக்கிய உபமாலிக்கா ரவிஹரி மொத்தமாக 161 கிலோ கிராம் எடையைத் தூக்கி கடைசி இடத்தைப் பெற்றார்.













