காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகத்தை உடன் புரிந்து கொள்ள முடியாவிடி னும் அவர்களுக்கு அவகாசம் கொடுத்துப் பார்ப்பது நல்லது என இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டான்ட் மிக்கினோ தெரிவித்தார்.
கனடாவின் இலங்கைக்கான தூதுவர் டான்ட் மிக்கினோ கடந்த 9ஆம் திகதி மன்னாருக்கு வருகை தந்துள்ளார். மன்னார் மாவட்டக் குடிமக்கள் குழு அலுவலகத்தில் தலைவர் அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகளார் உள்ளிட்ட ஆளுநர் சபைப் பிரதி நிதிகளை சந்தித்துக் கலந்துரையாடினார். குடிமக்கள் குழுவினர் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் விடயத்தில் கனேடிய அரசு பெரும் ஆதரவை வழங்கி வருகின்றது.இதனால் வடக்கு – கிழக்குப் பகுதிக்குச் சென்று மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் முகமாகவே நான் மன்னாருக்கு வந்துள்ளேன்.
நான் இலங்கைக்கான கனேடியத் தூதுவராக வந்து ஒன்பது மாதங்கள் தான்ஆகின்றன. தற்பொழுது மன்னாருக்கு வந்தது எனக்கு முதல் தடவையாகும். மன்னார் மாவட்டக் குடிமக்கள் குழுவாகிய நீங்கள் என்னிடம் என்னக் கேட்க விரும்புகின்றீர்கள்? என்று கனேடியத் தூதுவர் வினவினார்.
காணாமல் ஆக்கபட்டவர்களின் விடய மாகத் திறக்கப்பட்டுள்ள அலுவலகம் தொடர்பாகத் கனேடியத் தூதுவருடன் குடிமக்கள் குழுவினர் உரையாடினர்.
இந்த அலுவலகம் அரசுக்குச் சாதகமாகத்தான் செயற்படும் போல் எங்களுக்குச் சந்தேகம் ஏற்படுகிறது என்று குடிமக்கள் குழுவின் தலைவர் அருட்பணி ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த தூதுவர்:
இந்த அலுவலகத்தை முன்னெடுத்துச் செல்பவர் சாலிய பீரீஸ். அவர் மிகவும் நல்லவர். இருந்தும் சிறிது காலத்துக்குச் சந்தர்ப்பத்தை அவர்களுக்குக் கொடுத்து பாருங்கள். இப்பொழுது அவர்களின் செயற்பாட்டை உடன் கணிக்க முடியாது – என்றார்.
இந்த விடயம் தொடர்பில் தூதுவருடன் சிலமணிநேரங்கள் கலந்துரையாடப்பட்டது.












