கனடா; விபத்து நடந்ததாக நாடகமாடிய கும்பல்: உதவிக்கு சென்ற இளம்பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்
கனடா நாட்டில் சாலையில் விபத்து நடந்ததாக நாடகமாடிய கும்பலிடம் சிக்கிய பெண் ஒருவருக்கு நேர்ந்த சம்பவம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கல்கேரி நகரில் உள்ள Trans-Canada நெடுஞ்சாலையில் இளம்பெண் ஒருவர் நேற்று முன் தினம் பயணம் செய்துள்ளார்.
அப்போது, சாலையின் ஓரத்தில் கார் ஒன்று தடம்பிரண்டு நின்றுள்ளது. காருக்கு அருகில் 4 பெண்கள் கைகளை ஆட்டியவாறு நின்றுள்ளனர்.
இக்காட்சியை கண்ட இளம்பெண் விபத்து நிகழ்ந்துள்ளதாக எண்ணி தன்னுடைய காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றுள்ளார்.
பெண்களுக்கு அருகில் சென்று என்ன உதவி வேண்டும் என கேட்டபோது, 4 பேரில் ஒரு பெண் திடீரென இளம்பெண் மீது பாய்ந்து சரமாரியாக தாக்கியுள்ளார்.
இத்தாக்குதலை சற்றும் எதிர்பாராத அப்பெண் கீழே விழுந்துள்ளார்.
இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட நால்வரும் பெண்ணிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு அவர் வந்த காரில் ஏறி தப்பியுள்ளனர்.
கண் இமைக்கும் நேரத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை அப்பெண் பொலிசாரிடம் உடனடியாக புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்ற பொலிசார் கார் சென்ற திசையில் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். ஆனால், நால்வரும் அருகில் உள்ள காட்டுவழி பாதை வழியாக தப்பியுள்ளனர்.
மேலும், விபத்து நடந்ததாக கூறப்படும் கார் குறித்து விசாரணை செய்தபோது, அது ஏற்கனவே 4 பெண்களால் திருடப்பட்ட கார் எனத் தெரியவந்தது.
இளம்பெண்ணிடம் புகாரை பெற்றுக்கொண்ட பொலிசார் காரை திருடிச் சென்ற 4 பெண்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.