வெள்ளிக்கிழமை ஆக்லாந்து சூப்பர் மார்க்கெட்டில் கடைக்காரர்களை கத்தியால் குத்திய பயங்கரவாதியை நாடு கடத்த நியூசிலாந்து பல ஆண்டுகளாக முயன்றது என்று நியூஸிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
அஹமட் ஆதில் மொஹமட் சம்சுதீன் என்ற 32 வயதான இலங்கையர் நியூசிலாந்தில் தனது அகதி அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்த போது, இஸ்லாமிய அரசால் ஈர்க்கப்பட்டதாகவும் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறினார்.
குற்றவாளியின் பெயர் மற்றும் அவரது குடியேற்ற நிலை வெளியிடுவதைத் தடுத்த நீதிமன்ற உத்தரவுகள் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது.
இந் நிலையிலேயே நியூஸிலாந்து பிரதமர் மேற்கண்ட விடயங்களை தெரிவித்ததுடன், இலங்கை பிரஜையை 2019 ஆம் ஆண்டு முதல் நியூஸிலாந்திலிருந்து நாடு கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
சம்சுதீன் 2011 ஆம் ஆண்டு மாணவர் விசாவில் நியூசிலாந்திற்கு வந்து அகதி அந்தஸ்து கோரினார், ஆனால் சந்த சந்தர்ப்பத்தில் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
எனினும் அவருக்கு அகதி அந்தஸ்து டிசம்பர் 2013 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
பின்னர் தனிநபரின் அகதி அந்தஸ்து மோசடியாக பெறப்பட்டதாக வெளியான தகவல்களை அடுத்து 2016 ஆம் ஆண்டில் அவர் காவல்துறையினரின் கண்காணிப்புக்குள் வந்தார்.
அவரது அகதி அந்தஸ்து 2019 இல் இரத்து செய்யப்பட்டுடன் நாடு கடத்துவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் அவர் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மேல்முறையீடு செய்தார்.
சம்சுதீனின் அகதி அந்தஸ்து வழக்கு தீர்க்கப்படும் வரை அதிகாரிகள் அவரை சிறையில் தடுத்து வைக்க முயன்றனர். ஆனால் அவ்வறு செய்வதற்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லாத காரணத்தினால் அது பயனிக்கவில்லை.
இந் நிலையிலேயே அவர் வெள்ளிக்கிழமை ஆக்லாந்து சூப்பர் மார்க்கெட்டில் கத்தியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இந்த தாக்குதலை மேற்கொள்வதற்கு 30 நாட்களுக்கு முன்னர் சம்சுதீனின் மீது அதிகாரிகள் 24 மணிநேரமும் அவதானம் செலுத்தி வந்ததாகவும் நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறினார்.
கத்திக் குத்து தாக்குதலில் மொத்தம் 7 பேர் காயமடைந்தனர், அவர்களில் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளதுடன், மூன்று பேர் ஆபத்தான நிலையிலும் உள்ளனர்.
2019 ஆம் ஆண்டு கிரிஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு நியூஸிலாந்தில் பதிவான பயங்கரமான தீவிரவாத தாக்குதலாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் நியூஸிலாந்து பிரதமர், பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை கடுமையாக்குவதாகவும் உறுதியும் அளித்துள்ளார்.
பாராளுமன்றம் மீண்டும் தொடங்கியவுடன், நாங்கள் அதற்கான பணியினை நிறைவு செய்வோம் என்று அவர் உறுதியளித்துள்ளார்.