கடும் அச்ச நிலையில் மஹிந்த! காரணம் என்ன?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது அச்சம் நிறைந்த சூழ்நிலையில் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் இந்த அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் மஹிந்தவின் பெயர் இடம்பெற்றமை தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளாமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடி தகவல் வெளியாகி இன்றுடன் 16 நாட்கள் கடந்துள்ளது. இது வெளியாகியவுடன் மஹிந்த ராஜபக்சவின் ஊடக பேச்சாளர் “இதில் போலி கையொப்பமிடப்பட்டுள்ளது, இதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு சட்டப் பிரிவு கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, இது தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்திடம் முறைப்பாடு செய்ய வேண்டும் என அரசியல் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் இதுவரையில் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டால் ராஜபக்ச ஆட்சியில் வெளியிடப்பட்ட நிதி தொடர்பிலான பல வர்த்தமானிகள் சட்டவிரோதமானவைகள் என தெரியவரும் என சில வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக பல மோசடிகள் அம்பலமாகும் அபாயம் உள்ளதால், ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு அச்சம் பீடித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.