ஏக காலத்தில் வடக்கை விட்டு போகும் முதலமைச்சரும் அமைச்சர்களும்
வடக்கு மாகாணத்தில் உள்ள 5 அமைச்சர்களில் மூவர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளிநாடு செல்லவுள்ளனர்.
மற்றைய இரு அமைச்சர்களுமே ஐந்து அமைச்சுக்களையும் அந்தக் காலப் பகுதியில் கவனித்துக் கொள்ளவுள்ளனர் என்று தெரியவருகின்றது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், கனடாவின் மார்க்கம் நகருக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி புறப்படுகின்றார்.
அவர் 16ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்கவுள்ளார். இந்தக் காலப் பகுதியில் முல்லைத்தீவு நகர் இரட்டை நகர ஒப்பந்தம் உள்ளிட்ட நிதி சேகரிப்பு நிகழ்வுகளில் அவர் பங்குகொள்ளவுள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் அந்த அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோர் ஜனவரி 7ஆம் திகதி கனடாவுக்குப் பயணமாகின்றனர்.
கனடாவில் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சுகாதார சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே இவர்கள் செல்லவுள்ளனர்.
இதனால் ஏக காலத்தில், முதலமைச்சர், சுகாதார அமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோர் நாட்டில் இருக்கமாட்டார்கள்.
மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோரே மூன்று அமைச்சுக்களையும் நிர்வகிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.