அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக எழுந்த சர்ச்சை குறித்து ட்ரம்ப் மருமகன் ஜார்ட் குஷ்னரிடம் விசாரணை நடத்த எப்பிஐ முடிவு செய்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களில் ரஷ்ய தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பான விசரணையில் எப்பிஐ இறங்கியுள்ளது.
எப்பிஐயின் இந்த விசாரணை வளையத்தில் தற்போது, ட்ரம்பின் மருமகனும், வெள்ளை மாளிகையின் ஆலோசகருமான ஜார்ட் குஷ்னர் சேர்க்கப்பட்டுள்ளதாக எப்பிஐ கூறியுள்ளது.
இதுகுறித்து எப்பிஐ தரப்பில், “அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருப்பது தொடர்பாக ஜார்ட் குஷ்னரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய தூதர் செர்கே கிஸ்லயக், ரஷ்யாவிலுள்ள பிரபல வங்கியின் தலைமை அதிகாரியான செர்கே கோர்கோ ஆகிய இருவரை குஷ்னர் சந்தித்ததாக எழுந்த செய்திகளின் அடிப்படையில் குஷ்னர் விசரணையில் சேர்க்கப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாக குஷ்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 வயதான ஜார்ட் குஷ்னர் ட்ரம்பின் மூத்த மகளான இவன்கா ட்ரம்பின் கணவர் ஆவார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது ட்ரம்ப்பின் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.