என்னைத் தூக்குங்கள், என்னைத் தூக்குங்கள்!! மனதை உருக்கும் இந்தச் சிறுவனின் கதறல்!

என்னைத் தூக்குங்கள், என்னைத் தூக்குங்கள்!! மனதை உருக்கும் இந்தச் சிறுவனின் கதறல்!

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வீசப்பட்ட பெரல் குண்டுகளால் இரண்டு கால்களையும் இழந்த எட்டு வயதுச் சிறுவன், உதவிக்காகத் தன் தந்தையைக் கூக்குரலிட்டு அழைக்கும் காணொளி வெளியாகியுள்ளது.

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கடந்த ஒரு வார காலமாக அரச படைகளுக்கும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்று வருகிறது. இதில், சிரிய படைகள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்திவருகிறது.

இதன்படி, இட்லிப் மாகாணத்தின் அல்-ஹிபெய்ட் நகரில் கடந்த வியாழனன்று பெரல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் அப்தெல் பாஸி என்ற எட்டு வயதுச் சிறுவன் இரண்டு கால்களையும் பறிகொடுத்தான். அவன், தனது தந்தையை நோக்கி உதவுமாறு கூக்குரலிடும் காணொளிக் காட்சியொன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

சிகிச்சைக்காக துருக்கி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கும் இச்சிறுவனும் அவனது தந்தையும் அங்கு இடம்பெற்ற தாக்குதல் பற்றி தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளனர்.

“நாங்கள் வீட்டுக்கு வெளியே மதிய உணவருந்திக்கொண்டிருந்தோம். அப்போது பெரல் குண்டுகள் வீசப்படத் தொடங்கின. உடனே எம்மை வீட்டின் உள்ளே போகுமாறு அப்பா கூறினார். உடனே நாம் வீட்டை நோக்கி ஓடினோம். ஆனால் அதற்குள் ஒரு பெரல் குண்டு எமது வீட்டின் மேல் விழுந்து வெடித்தது. வெடித்த மாத்திரத்தில் நெருப்பு என்னை நோக்கிப் பாயந்து வந்ததுடன் எனது இரண்டு கால்களையும் துண்டாக்கியது.

உடனே எனது அப்பா என்னைத் தூக்கிக்கொண்டு போய், இன்னொரு இடத்தில் வைத்தார். உடனே அங்கு வந்த அம்பியுலன்ஸ் ஒன்று என்னையும் அப்பாவையும் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றது” என்று அப்தெல் கூறினான். இத்தாக்குதலில் அப்தெல்லின் தாய் கொல்லப்பட்டார்.

அப்தெல்லை நிலத்தில் வைத்து விட்டு தன் மனைவியின் நிலையறிய முயன்ற தந்தையைப் பார்த்து, “என்னைத் தூக்குங்கள், என்னைத் தூக்குங்கள்” என்று அந்தச் சிறுவன் கதறியது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *