எதிர்க்கட்சித் தலைமைப் பதவியால் நேற்று நாடாளுமன்றில் கடும் சர்ச்சை ஏற்பட்டது. கூடிய ஆசனங்களைக் கொண்ட குழு என்ற அடிப்படையில் தமக்கே எதிர்க்கட்சிப் பதவி தரப்பட வேண்டும் என்று கூட்டு எதிரணியினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த விடயத்தைக் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர், சட்ட ஆலோசனைகளைப் பெற்று முடிவை இந்த வாரத்தில் அறிப்பேன் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று வாய்மூல விடைக்கான வினா நேரம் முடிந்த பின்னர் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய கூட்டு எதிரணியின் குழுத் தலைவர் தினேஸ் குணவர்த்த வைத்த கருத்தை அடுத்து சபையில் சர்ச்சை ஆரம்மானது.நாடாமன்றத்தில் எதிர்க்கட்சியில் எமக்கே அதிகளவிலான ஆசனங்கள் உள்ளன. தற்போது எமது குழுவில் 70 பேர் உள்ளனர். எனவே எதிர்க்கட்சி தலைவர் பதவி எமக்கே பெற்றுத் தரப்பட வேண்டும் என நாம் கோரினோம். எழுத்து மூலமும் சபாநாயருக்கு அறிவித்தோம். இன்று (நேற்று ) தீர்மானத்தை வழங்குவதாக கூறியிருந்தீர்கள்.புதிய தீர்மானமொன்றை வழங்குவதாகவே கூறினீர்கள். எங்கே அந்தத் தீர்மானம்?.
எமக்கு எதிர்க்கட்சி பதவி தரவேண்டும். சம்பந்தனுடன் எமக்கு தனிப்பட்ட பிரச்சினை இல்லை. அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதும் அவருக்கு கீழ் நாம் செயற்பட்டுள்ளோம். சம்பந்தன் எமக்கு பிரச்சினையில்லை.
ஆனால் நாடாளுமன்றத்தில் ஜனநாயக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். சம்பிரதாயத்தை மீறி செயற்பட கூடாது. நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் தற்போது செல்லா காசாக மாறிவிட்டது. ஆகவே எதிர்க்கட்சி தலைவர் பதவியை எமக்கு பெற்று தர வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
அப்போது சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல எழுந்து கருத்துத் தெரிவித்தார்.
கூட்டு எதிரணி என்பது ஒரு கட்சியல்ல. அது ஒரு கும்பல் என்று அவர் கிண்டலடித்தார். அப்போது பக்கத்தில் அமர்ந்திருந்த அமைச்சர் ஜோன் அமரதுங்க, அது கட்சியல்ல, ஆவா கும்பல் என்றார்.
கிரியெல்லவின் கருத்தால் கூட்டு எதிர்க்கட்சியினர் சீற்றமடைந்தனர். அமைச்சருக்கு எதிராகக் கோசமிட்டனர். அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் விவகாரத்தில் ஆளும் கட்சி ஊடகங்கள் இரா.சம்பந்தனையும், தினேஸ் குணவர்த்தனவையும் சம்பந்தப்படுகின்றன. தமிழ் ஊடகங்கள் இரா.சம்பந்னை முதன்மைப்படுத்தி கருத்து வெளியிடுகின்றன. எமக்கு அவ்வாறான நோக்கமில்லை. ஆசன மட்டத்தில் எமக்கே அதிக ஆசனங்கள் இருக்கின்றன. ஒப்பீட்டு அடிப்படையில் எமக்கே எதிர்க்கட்சிப் பதவி வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.
தற்போது எதிர்க்கட்சியில் 7 வீதத்தை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் 2.8 வீதத்தை கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சி பிரதம கொறடா பதவியும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் 31 வீதத்தை கொண்ட எமக்கு ஒழுங்காக நேரம் கூட ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.
நாடாளுமன்றத்தின் பழைய கட்சிகளான சமசமாஜ கட்சி உட்பட பொதுஜன ஐக்கிய முன்னணி போன்ற கட்சிகளை பிரதிநிதித்துப்படுத்துவர்களே இந்த கோரிககைகளை முன்வைக்கின்றனர். ஆகவே இது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உடனே எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல, சரி ஏனையவர்களை விட்டு விடுங்கள். நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்து கட்சி என்ன? கூறுங்கள், உங்களின் கட்சி என்ன ? என்று கேட்ட போது டலஸ் அழகபெரும உட்பட ஏனையோர் திக்கு முக்காடி பதிலளிக்க முடியாமல் திண்டாடினர். கிரியெல்லவுக்கு எப்போதும் குழப்புவதே வேலையாகும் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும
100 நாள் ஆட்சியின் போது சுதந்திரக் கட்சியின் பலர் ஆளும் கட்சியில் இருந்த போதும் எதிர்க்கட்சி தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவே செயற்பட்டார். ஆகவே நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கியதை போன்று தினேஷ் குணவர்தனவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணக்கார, விமல் வீரவன்ச ஆகியோர் வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சி தலைவர் பதவியை எமக்கு நீங்கள் பெற்று தரமாட்டீர்கள். உங்களுக்கு உயர்மட்டத்தில் இருந்து அழுத்தம் வருவதனை நாம் அறிவோம். ஆகவே இந்த சந்தர்பத்தில்தான் முதுகெலும்புடன் செயற்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவரான இரா.சம்பந்தன் , தெற்கு பிரச்சினை மாத்திரமின்றி வடக்கு மக்களின் பிரச்சினை பற்றி கூட நடாளுமன்றத்தில் பேசுவது கிடையாது. அவர் ஒரு சிலரின் அழுத்தங்களின் பிரகாரமே அந்த கதிரையில் உள்ளார். ஆகவே அவரை பதவியில் இருந்த நீக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ கூறினார்.
எனக்கு எந்தவொரு அழுத்தமும் என்மீது பிரயோகிக்கப்படவில்லை. நான் அழுத்தங்களுக்கு அடிப்பணிய மாட்டேன். இது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் சட்ட ஆலோசனைகளை பெற்று இந்த வாரமளவில் அறிவிப்பேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.