வரும் யூலை மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர், தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைக்க டெல்லி பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைத்து அதன் பிறகு கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கலாம் என பாஜக திட்டமிட்டிருந்தது.
ஆனால் இரு அணிகள் இணைப்பு என்பது, இப்போதுள்ள சூழலில் சாத்தியமே இல்லை என்று பாஜக மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.
மேலும் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து இன்னும் அகலவில்லை என்பதை பன்னீர் சொல்வம் மட்டும் அல்ல, பாஜக வும் தெளிவாக அறிந்துள்ளது.
அதிமுகவின் கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் சசிகலா குடும்பத்தின் பிடியில் சிக்கி இருப்பதால், அந்த பணம் முழுவதையும் கைப்பற்றிய பின்னரே, அவர்களை முற்றிலுமாக கட்சியை விட்டு நீக்க முடியும் என்று எடப்பாடி தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், வரும் ஜனாதிபதி தேர்தலில் அதிமுக எம்.எல்.ஏ மற்றும் எம்.பி. க்களின் வாக்குகள் அனைத்தும் சிந்தாமல் சிதறாமல் முழுமையாக பாஜகவுக்கு வேண்டும் என்பதாலும் மோடி கெடுபிடி காட்டாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இரு அணிகளையும் இணைக்கும் விஷயத்தில் மோடி தலையிட்டிருந்தால், எப்போதோ அணிகள் இணைப்பு முடிந்திருக்கும்.
ஆனால் பன்னீர், எடப்பாடி ஆகிய இருவருமே போட்டி போட்டுக்கொண்டு பாஜக தலைமைக்கு விசுவாசம் காட்டுவதால் அதில் அவர் பெரிய அளவில் தலையிட விரும்பவில்லை.
அதே சமயம், தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பன்னீருக்கே அதிக செல்வாக்கு இருப்பதையும் மோடி கணக்கில் கொண்டுள்ளார்.
இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில், அதிமுக எம்.எல்.ஏ, எம்.பி க்களின் வாக்குகளை பெற்ற பின்னர், முதல்வர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் மீதான ஊழல் கோப்புகளை தூசு தட்டி எடுத்தால், அவர்களே ஆட்சியை விட்டு விலகி விடுவார்கள் அல்லது ஆட்சியை கலைத்து விடலாம் என்று டெல்லி மேலிட வட்டாரங்கள் திட்டம் தீட்டி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.