எங்கள் சொந்த நிலத்தை தாருங்கள்! திடீரென இராணுவ முகாம் வாசலை மறித்த கேப்பாப்புலவு மக்கள்
தங்கள் சொந்த நிலத்தை மீட்டெடுக்க துடியாய்த் துடிக்கிறார்கள், கேப்பாப்புல- பிலக்குடியிருப்பு மக்கள். ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு பாதி வெற்றியே கிடைத்திருக்கிறது.
முழுமையாக இன்னமும் அவர்களின் நிலங்கள் விடுதலை செய்யப்படவில்லை. அரசாங்கம் வாக்குறுதிகளைக் கொடுத்து, கொடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்களும், சமூக ஆர்வலர்களும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றார்கள்.
இந்நிலையில், வடக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிப்பது குறித்து சரியான முடிவு எடுக்கப்படும் என ஜனாதிபதி பல்வேறு தடவைகள் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரின் வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேறவில்லை.
முன்னதாக கடந்த முதலாம் திகதி, முல்லைத்தீவு இராணுவ படைத்தலைமையகம் முன்பாக கேப்பாப்புலவு மக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்ககோரி ஆரம்பித்த தொடர் போராட்டம் இன்று பதினோராவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தமது காணி விடுவிப்பு தொடர்பில் யாரும் எந்த முடிவுகளையும் எடுக்காத நிலையில், இன்றைய தினம் விவேகானந்தன் தியீபன்(28), பொன்னுத்துரை அழகராஜா(55) ஆகியோர் தமக்கான தீர்வு கோரி சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆனால் கடும்கோபமடைந்த மக்கள், சொந்தக் காணிக்கு செல்ல இந்த ஆண்கள் தங்களை ஏன் வருத்தவேண்டுமென கொதித்தெழுந்தனர்.
இதனால், இராணுவ முகாம் வாசலை நோக்கி கோசங்களை எழுப்பியவாறு சென்று இராணுவ முகாம் வாயிலை பத்து நிமிடங்கள் வரை மறித்து இராணுவத்தை திட்டித்தீர்த்ததோடு தமது காணிகளை விடுமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீண்ட காலமாக தமது சொந்த நிலத்தை வேண்டி நிற்கும் மக்களுக்கு ஆதரவாக இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.