எங்களைப் பகைத்துக் கொண்டால் ஆட்சியை நடத்த முடியாது என்று சசிகலா சகோதரர் திவாகரன் எச்சரித்துள்ளார். டிடிவி தினகரன் சார்பில் இன்று மாலை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் மதுரை மேலூரில் நடைபெற உள்ளது. அங்கேயே இருந்து பொதுக் கூட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் திவாகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழக அரசை எதிர்த்து தான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று கூறிய திவாகரன், அடிமட்ட தொண்டர்களையும் நிர்வாகிகளையும் நம்பி தான் அதிமுக இருக்கிறதே ஒழிய, அமைச்சர்களை நம்பி இல்லை என்றார். அதிமுகவில் உள்ள அனைத்துத் தொண்டர்களும் தினகரன் பக்கமே உள்ளனர் என்று கூறிய திவாகரன், 0 எங்களை பகைத்துக் கொண்டால் ஆட்சியைத் தொடர முடியாது என்று எச்சரித்தார். மேலும், ஓ.பன்னீர் செல்வம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினால் பாதுகாப்பு அளிக்கும் தமிழக அரசு, நாங்கள் கொண்டாடினால் அனுமதி மறுப்பதோடு இடையூறும் செய்து வருகிறது என்று திவாகரன் குற்றம்சாட்டினார். இன்று மாலை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட மேலூர்-அழகர்கோவில் சாலையில் உள்ள திடலில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு உள்ளது. சாலையின் ஓரங்களில் சசிகலா மற்றும் தினகரனின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன