இரட்டை இலை சின்னம் இல்லாததால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு பயப்படுவதாகக் கூறுவதில் உண்மையில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போவதற்கு அதிமுகவில் நிலவும் உள்கட்சிப் பூசலும் தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதுமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு ஏற்றாற் போல சென்னை உயர்நீதிமன்றம் 2 முறை தேர்தல் நடத்துவதற்கான கெடு விதித்தும் தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடவில்லை.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தேர்தல்களைக் கண்டு பயப்படும் இயக்கம் அதிமுக அல்ல என்று கூறியுள்ளார். இரட்டை இலை சின்னம் இல்லாததால் தேர்தலைப் பார்த்து பயப்படவில்லை என்றும், சின்னத்தைப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீதிமன்றம் சில வழிகாட்டுதலால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போயுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.