தென்கிழக்கு இங்கிலாந்தில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ‘ஆல்பா’ வகை கொரோனா வைரஸ் நாய், பூனைகளுக்கு பரவி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து பல்வேறு வகையில் உருமாறியது.
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனை அடையாளம் காண்பதற்கு உலக சுகாதார அமைப்பு உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு பெயர்களை சூட்டியது.
அதில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரசுக்கு ‘ஆல்பா’ என்றும், இந்தியாவில் உருமாறிய கொரோனாவுக்கு ‘டெல்டா’ என்றும் பெயர் சூட்டப்பட்டது. மேலும் டெல்டா வகை வைரஸ் முன்பிருந்த வைரசை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தென்கிழக்கு இங்கிலாந்தில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ‘ஆல்பா’ வகை கொரோனா வைரஸ் நாய், பூனைகளுக்கு பரவி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது கால்நடை மருத்துவ துறையினர் செய்த ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
2 பூனைகள் மற்றும் ஒரு நாய் ஆகியவற்றுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவைகள் ‘ஆல்பா’ வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த செல்லப்பிராணிகளுக்கு நோய் பாதிக்கப்படுவதற்கு பல வாரங்களுக்கு முன்பாக சுவாச பிரச்சினைகள் இருந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த செல்லப்பிராணிகள் அனைத்துக்கும் இதய நோயின் கடுமையான தொடக்கமும் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிபுணர் லூகா பெராசின் கூறும்போது, ‘ஆல்பா’ கொரோனா வைரசால் விலங்குகள் பாதிக்கப்பட்டு இருப்பது எங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது முன்பை விட மாறுபட்டது. கொரோனா வைரசால் விலங்குகளும் பாதிக்கப்படும் அபாயத்தை எடுத்துக் காட்டுகின்றன.
கடுமையான இதய பிரச்சினைகள் இருப்பதையும் நாங்கள் சுட்டிக்காட்டி உள்ளோம். எங்களின் தரவுகளின் அடிப்படையில் மனிதர்களிடம் இருந்து செல்லப் பிராணிகளுக்கு வைரஸ் பரவுகிறது… இவ்வாறு அவர் கூறினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]