சிலருக்கு ஈழம் என்பது ஒரு நிலத்தின் பெயர். சிலருக்கு அது ஓர் அரசியல் விவாதம். ஆனால், இன்னும் சிலருக்கு அது நீதியின் மீதான தேடல்; ஒடுக்கப்பட்ட ஒரு மக்களின் வரலாற்றின்மீதான ஆழமான புரிதல்.
ஜோ மல்லூரி ஈழ விடுதலைப் போராட்டம் குறித்தும், தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்தும் பல்வேறு மேடைகளில் பேசியிருக்கிறார். அவரது உரைகளில் ஈழம் வெறுமனே ஒரு தொலைதூர அரசியல் பிரச்சினையாக வெளிப்படுவதில்லை. ஒரு மக்களின் இழப்புகள், போராட்டத்தின் பின்னணி, விடுதலைக்கான வேட்கை ஆகியவற்றை அறிந்துகொள்ளும் முயற்சியாக வெளிப்படுகிறது.
ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான உறவு மொழியால் மட்டும் கட்டப்பட்டதல்ல. அது இரத்தத்தாலும், கண்ணீராலும், வரலாற்றாலும், நினைவுகளாலும் பின்னப்பட்ட உறவு. அந்த உறவின் ஒரு வெளிப்பாடாகவே ஜோ மல்லூரியின் ஈழம் குறித்த பேச்சுகளையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
ஈழத்தின் வலிகளைப் பேசுவதற்கு ஈழத்தில் பிறந்திருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு மக்களின் வலியை உணர்வதற்கும், அவர்களின் வரலாற்றை மதிப்பதற்கும் மனிதநேயமும் வரலாற்றுப் புரிதலும் போதுமானவை.
ஈழம் குறித்த அவரது குரல், எல்லைகளைக் கடந்து பேசப்பட வேண்டிய ஒரு வரலாற்றின் நினைவூட்டலாக இருக்கிறது. எமது ஒவ்வொரு அசைவுகளும் துடிப்புகளும்கூட எங்கள் தேசவிடுதலை பற்றியதாக இருக்கட்டும்.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை













