இலங்கை அரசுக்கு 2 ஆண்டுகால அவகாசம்! அரசின் முயற்சிகளுக்கு வரவேற்பு.
ஜெனீவாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுவதற்கான தீர்மானங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு எதிர்வரும் மார்ச் 16ம் திகதியுடன் முடியப்போகிறது.
இந்தக் காலக்கெடுவுக்குள் இலங்கை தொடர்பான மற்றொரு தீர்மான வரைவை பேரவையில் சமர்ப்பிப்பதற்கான தீவிர முயற்சிகள் ஜெனீவாவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2012ஆம் ஆண்டு, முதல்முறையாக இலங்கை தொடர்பான தீர்மான வரைவு முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அப்போதும் சரி, அதற்குப் பின்னர், 2013, 2014, 2015ஆம் ஆண்டுகள் வரையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தின் போதும், ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட வரைவுகளை விடவும் காத்திரம் குறைந்த தீர்மானங்களே பேரவையில் நிறைவேற்றப்பட்டமை வரலாறு.
தீர்மான வரைவு வாசகங்களை நீர்த்துப் போகச் செய்வதில்- இந்தியா போன்ற நாடுகளின் பங்கு கணிசமாகவே இருந்து வந்திருக்கிறது.
கடந்த காலங்களை விடவும் இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு மிகச் சிறியதாகவும், பெரியளவில் அழுத்தங்களைக் கொடுக்காததாகவும் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.
வரும் 22ம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது, தீர்மான வரைவு ஒன்று முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்படவுள்ளது.
இறுதியாக முன்வைக்கப்படுவதற்கான தீர்மான வரைவு இன்னமும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படாத போதிலும், ஆரம்பக்கட்ட வரைவு ஒன்றை முன்னிறுத்திய கலந்துரையாடல்கள் ஜெனீவாவில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன.
கடந்த செவ்வாய்க்கிழமை மார்ச், 7ம் திகதி, இணை அனுசரணை நாடுகளின் ஏற்பாட்டில் ஜெனீவாவில் நடத்தப்பட்ட ஓர் உப மாநாட்டில், இந்த தீர்மான வரைவு வெளியிடப்பட்டதாயினும், அதற்கு முன்பாக, கடந்த மார்ச் 3ம் திகதியே இந்த வரைவின் பிரதி கசிந்து விட்டது.
இந்த ஆரம்ப வரைவு, ஒன்றரைப் பக்கங்களை விடக் குறைவானது. 30/1தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளை இது வரவேற்கிறது, பாராட்டுகிறது.
அதைவிட, இன்னும் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகள் இருப்பதை நினைவூட்டுகிறது. அத்துடன், 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசத்தையும் அளிக்கிறது.
அது எப்படியென்றால், 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக, பேரவையின் 40வது கூட்டத்தொடரிலேயே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர், விரிவான எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆணையின் ஊடாகவே இந்தக் காலஅவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு, எதிர்வரும் 2019 மார்ச் மாதமே இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு முன்னதாக, 37வது கூட்டத்தொடரில், வாய்மொழி அறிக்கையை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 37வது கூட்டத்தொடர், 2018 மார்ச் மாதம் நடைபெறும்.
இது தவிர, கலப்பு விசாரணை பற்றிய வெளிப்படையான உள்ளடக்கங்களோ, அல்லது, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்த, நல்லிணக்கச் செயல்முறைகளைக் கண்காணிப்பதற்கான ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் முழு அளவிலான செயலகம் ஒன்றை இலங்கையில் அமைக்க வேண்டும் என்ற பரிந்துரை குறித்தோ இந்த வரைவில் எந்த விடயங்களும் இருக்கவில்லை.
ஆனால், நல்லிணக்கம், நீதி, உண்மை, பொறுப்புக்கூறல் ஆகியன தொடர்பான 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை உதவிகளை வழங்கி ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகம் ஒத்துழைக்க வேண்டும் என்று மாத்திரம் தீர்மான வரைவில் கூறப்பட்டிருக்கிறது.
30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு என்ற வாசகத்தின் ஊடாக, மாத்திரமே மறைமுகமான வகையில் கலப்பு விசாரணைப் பொறிமுறை பற்றிய கருத்து வலியுறுத்தப்பட்டிருக்கிறதே தவிர, நேரடியாக அதனைச் செய்யவில்லை.
இலங்கை அரசுடன் இணைந்தே இந்த வரைவு தயாரிக்கப்பட்டது என்பதாலும், இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கப் போவதாக அறிவித்திருப்பதாலும், கலப்பு விசாரணைப் பொறிமுறை பற்றிய வாசகங்கள் உள்ளடக்கப்படுவது சாத்தியமற்றதே.
கடந்த 7ம் திகதி இணை அனுசரணை நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, மொன்ரனிக்ரோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ஜெனீவாவில் நடத்திய உப மாநாட்டில், கலப்பு விசாரணை என்பதை உள்ளடக்கியதாக தீர்மான வரைவு இடம்பெற வேண்டும் என்பதை, ஐரோப்பிய ஒன்றியம், சுவிற்சர்லாந்து, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியிருந்தனர்.
பொறுப்புக்கூறலுக்கான நீதிப்பொறிமுறைகளில் வெளிநாட்டுப் பங்களிப்பு அவசியம் இடம்பெற வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் வகையில் தீர்மான வரைவு இருக்க வேண்டும் என்று இந்த நாடுகள் கோரியிருந்தன.
எனினும், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறைக்கு மீண்டும் வலியுறுத்தும் வகையில் இறுதியான தீர்மான வரைவு முன்வைக்கப்படுவதற்கு சாத்தியங்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன.
ஏற்கனவே, வெளிநாட்டு நீதிபதிகள் என்ற விடயத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகளை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
2015 தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள கலப்பு விசாரணைப் பொறிமுறை பற்றிய பரிந்துரையை இனிமேல் நீக்க முடியாது. ஆனால், இம்முறை தீர்மானத்தில் அதற்கான நேரடியான வலியுறுத்தலைத் தவிர்த்துக் கொள்வதில் இதுவரையில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கிறது.
அதனால் தான், தீர்மான வரைவு குறித்த உபகுழுக் கூட்டத்தில் திருத்தங்கள் எதையும் அரசதரப்பு பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க முன்மொழியவில்லை.
இந்த உபகுழுக் கூட்டத்தில் சுவிற்சர்லாந்து முன்வைத்த ஒரு யோசனையும், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் முன்வைத்த பரிந்துரையும் இறுதி வரைவில் உள்ளடக்கப்படுமா என்ற கேள்வி இருக்கிறது.
ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதை உப குழுக் கூட்டத்தில் ஆதரித்திருந்த சுவிற்சர்லாந்து, தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான காலவரையறைகளுடன், கூடிய பாதை வரைவு அல்லது செயற்திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது.
அதேவேளை, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரும் காலவரம்புடன் கூடிய செயற்திட்டம் தொடர்பாக தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் முதல்நிலை வரைவில் இதுபற்றிய எந்த அம்சங்களும் இடம்பெற்றிருக்கவில்லை.
காலவரம்புடன் கூடிய செயற்றிட்டத்தை இலங்கை அரசாங்கம் எதிர்க்குமா என்று தெரியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட இதனை வலியுறுத்தியிருக்கிறது.
எனவே, இந்த விடயம் இறுதி வரைவில் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் இருந்தால் அது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஐ.நா. மனித உரிமை ஆணையாளரும் முன்வைத்த, தீர்மானப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்கான ஐ.நா. செயலகத்தை அமைக்கும் விடயம் குறித்து முதல்நிலை வரைவில் எதுவுமே இடம்பெறவில்லை.
இது முக்கியமானதொரு பரிந்துரை. ஏற்கனவே 18 மாதங்களை இழுத்தடித்து விட்ட அரசாங்கத்துக்கு காலஅவகாசம் வழங்கும் போது அதுபற்றிய சர்வதேச கண்காணிப்பு ஒன்று அவசியமாகிறது.
ஏற்கனவே, 2015ம் ஆண்டில் கூட இத்தகையதொரு கண்காணிப்பு பணியகத்தை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்ட போது அதற்கு இலங்கை அரசாங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.
ஐ.நா. அலுவலகம் அமைக்கப்படுவதை இறைமையுடன் தொடர்புடைய விவகாரமாகவே அரசாங்கம் வெளிப்படுத்தி தடுத்தது.இப்போது மீண்டும் இதே கோரிக்கை முன்வைக்கப்படுகின்ற நிலையில், இதனைச் செயற்படுத்துவது எந்தளவுக்குச் சாத்தியம் என்பது கேள்விக்குறி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியிருந்தாலும், இதற்கு ஆதரவு திரட்டுவதற்கு கூட்டமைப்பு எந்தளவுக்கு செயற்பட்டது என்ற கேள்வி இருக்கின்றது.
கடந்த 7ம் திகதி நடந்த உப மாநாட்டில், பேரவையின் 36வது கூட்டத்தொடரில், அதாவது இன்னும் ஆறு மாதங்களில் ( 2017 செப்டெம்பர்) ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை, சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கனடா தரப்பில் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது.அந்த யோசனைக்கும் அவ்வளவாக ஆதரவு கிடைத்ததாகத் தெரியவில்லை.
முன்னதாக, இம்முறை தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழியுமா என்ற சந்தேகங்கள் நிலவியிருந்தன. ஆனால், பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரனிக்ரோவுடன் இணைந்து தீர்மானத்தை முன்வைப்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தி விட்டது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பித்ததில் இருந்தே, அமெரிக்காவின் பிரதி உதவி இராஜாங்கச் செயலர், எரின் பார்க்லே, ஜெனீவாவில் முகாமிட்டுள்ளார்.
அவர் இணை அனுசரணை நாடுகள், உறுப்பு நாடுகள் மற்றும் இலங் கையுடன் பல்வேறு பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.
கடந்த 7ம் திகதி நடந்த உப மாநாட்டிற்கும், ஏனைய இணை அனுசரணை நாடுகளின் பிரதி நிதிகளுடன் இணைந்து இவரே தலைமை வகித்திருந்தார்.
இந்த உப மாநாட்டில், எரின் பார்க்லே சில விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தார். அதில் ஒன்று, 30/1 தீர்மானத்தின் எந்த அம்சமும் மாற்றப்படவில்லை என்பதாகும்.
அதன்படி பார்த்தால், கலப்பு விசாரணைப் பொறிமுறைப் பரிந்துரை அப்படியே தான் இருக்கப் போகிறது.இந்த முறையில் விசாரணை நடக்குமோ இல்லையோ, கலப்பு விசாரணைப் பரிந்துரையை நீக்குவதற்கான யோசனை புதிய தீர்மான வரைவில் இடம் பெறுவதற்கான அறிகுறி இல்லை.
புதிய தீர்மானம் மூலம் இலங்கைக்குக் கடிவாளம் போடப்படலாம் என்ற எதிர்பார்ப்புப் பொய்யாகிப் போகும் வாய்ப்புகளே இருந்தாலும், தாம் நினைத்தவாறு இலங்கையைச் செயற்பட விடுவதற்கும் சர்வதேச சமூகம் தயாராக இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.