நாடு முழுதும் இந்தியப் பிரதமர் மோடியின் வருகை குறித்து பரபரப்பான செய்திகள் வெளி வந்த வண்ணமே இருக்கின்றன. ஆனாலும் உண்மையில் மோடி எதற்காக இலங்கை வந்தார்?
இந்தக் கேள்விக்கு விடை மட்டும் இதுவரையில் வெளிப்படையில்லை. ஆனால் சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு பிரதமர் வருகைத் தந்தார். அடுத்தது மலையகத்தில் இந்திய நிதியுதவியில் அமைக்கப்பட்ட வைத்தியசாலையை திறந்து வைக்கவே வந்திருந்தார்.
இந்த இரண்டுமே பிரதான காரணங்களாக வெளிப்படையாக காட்டப்படுகின்றது. ஆனாலும் இவை மட்டுமா உண்மையான காரணங்கள் என்ற வகையிலான சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேபோன்று இலங்கைக்கான மோடியின் விஜயத்தில் இவற்றினைத் தாண்டி பல்வேறு அரசியல் காய் நகர்த்தல்களே இடம் பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
காரணம் மோடியின் வருகைக்கு ஆரம்பத்தில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு வரும் தரப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். கருப்புக் கொடி காட்டி எதிர்க்க மக்களின் ஆதரவை கோரினர்.
பாராளுமன்றத்திலும் கூட இந்தக் கருத்தை அழுத்தித் தெரிவித்தனர். ஆனாலும் சட்டென்று எதிர்ப்பு தெரிவித்த எவரும் முன் வரவில்லை. அதுமட்டுமல்ல விமல் வீரவன்ச இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில்,
“மோடியில் வருகையின் போது கருப்புக் கொடி பிடித்து எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்” எனத் தெரிவித்ததை அப்படியே மாற்றி., அப்படியான கருத்தை விமல் தெரிவிக்கவே இல்லை.
இந்தியப் பிரதமர் அல்லது ஏனைய பிரதமர் குறித்து எந்தக் கருத்தினையும் பேச விரும்பவில்லை என்று மாற்றுக் கருத்தினை வெளியிட்டுள்ளார் மகிந்த ராஜபக்ச. இந்தத் திடீர் மாற்றம் எதனால்?
அதே போல் மோடியின் வருகை சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு என்று அமையுமானால், ஏற்கனவே துரையப்பா மைதானத்தை திறந்து வைத்தது போல் இந்தியாவில் இருந்தே திறந்து வைத்திருக்கலாம் ஆனால் நேராக வந்துள்ளார்.
அதுவும் மிக முக்கியமாக மோடியின் இந்த விஜயம் சக்கரம் பூட்டப்பட்ட கால்களைக் கொண்டதாகவே அமைந்திருந்தது.
அதாவது இந்தியாவில் இருந்து வந்த அவர் ஒரு இடத்திலும் நிற்கவில்லை விமானத்தில் இருந்து இறங்கியது தொடக்கம், ஓர் இயந்திரமாகச் சுழன்று விட்டு மீண்டும் பறக்க ஆயத்தமாகின்றார்.
அதேபோல அடுத்ததாக இவரின் மலையகப் பயணம். மலையகத்திற்கு சென்ற மோடி வைத்தியசாலையை திறந்து வைத்தது மட்டும் இல்லாமல் மலையக மக்களுக்கு பல வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து விட்டுச் சென்று விட்டார்.
இத்தனை வருடங்கள் அவர் கண்களில் படாத மலையக மக்கள் இன்று மோடியின் (இந்தியாவின்) பார்வையில் பட்டுள்ளனர் என்றால் சந்தோசமே.
இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது, மலையக மக்களுக்கு 4000 வீடுகள் அமைக்க இந்தியதரப்பு முன்னேற்பாடு செய்து விட்டது. அடுத்து 10000ஆயிரம் வீடுகள் அமைத்துத் தருவோம் என்ற உறுதியும் கொடுத்துள்ளார் மோடி.
மலையக அரசியல் தலைவர்களை சந்தித்து விஷேட பேச்சுவார்த்தை நடத்திய மோடி, வடக்கு கிழக்கு அரசியல் வாதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஆனாலும், பல்வேறு வகையான இக்கட்டினைச் சந்தித்து வரும் வடக்கு கிழக்கு மக்களின் வீட்டுத்திட்டங்களும், காணி விடுவிப்பும் கண்டு கொள்ளாமல் இருக்கும் இடத்தில் மலையகத்தின் மீது அதி கரிசனை வீழ்ந்துள்ளது.
அத்தோடு மோடி சந்தித்த அரசியல் தலைவர்களில் மகிந்த ராஜபக்சவும் ஒருவர். அவருடன் எந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது வெளிப்படுத்தப்பட வில்லை.
குறிப்பாக மகிந்த மற்றும் மோடிக்கு இடையில் இடம்பெற்ற இரகசிய சந்திப்பில், கோத்தபாய ராஜபக்ச, ஜீ. எல் பீரிஸ் போன்றவர்களும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆட்சிக் கவிழ்ப்பில் அதி தீவிரமான ஈடுபட்டு வரும் ஒருவரையும், இலங்கை அரசு குற்றவாளியாக கூறும் ஒருவரையும், அரசின் அழைப்பினால் வந்த மோடி சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளமை எதற்காக?
அவ்வாறெனில் மகிந்தவை சத்திப்பதற்காகவா இந்தியப் பிரதமர் இலங்கை வந்தார் என்ற கேள்வியை எழுப்புவதோடு, போர்க்குற்றம் தொடர்பில் அதிக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு கொண்டு வரும் வேளையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
மற்றொருவகையில் இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பது அனைவரும் அறிந்தவிடயமே.
அதேபோல் இந்திய அரசியலில் ஓர் பங்களிப்பை செய்யக் கூடிய வடக்கு தமிழர்கள் மோடியின் வருகையில் ஒதுக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.
இப்போதும் கூட நாட்டில் வடக்கு கிழக்கில் தமிழ்மக்கள் போராட்டங்கள் நடைபெற்றவாறே இருக்கின்றது. ஆனாலும் அவை குறித்து எந்தவிதமான கருத்தினையும் மோடி வெளியிடவில்லை என்றே கூறப்படுகின்றது.
ஆனால் இதுவரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த மலையகத்தின் மீது இந்தியாவின் பார்வை சென்றுள்ளது. இவ்வாறான பல கேள்விகள் தொக்கியுள்ள நேரத்தில் பாரதப் பிரதமர் வந்த வழி சென்று விட ஆயத்தம்.
ஏற்கனவே தமிழர்களுக்கு தீர்வு வழங்கவேண்டும் என்று வந்த ஐ. நா பிரமுகர் பான் கீன் மூன் பின்வாசல் வழியாக, தமிழர்களை கண்டுகொள்ளாமல் சென்ற நிலையில் மோடி வடக்கு தமிழர்கள் குறித்து அக்கறை காட்டாதது ஒன்றும் பெரிய விடயம் அல்ல.
இவை அனைத்தையும் தொகுத்து நோக்கும் போது இந்தியப் பிரதமர் மோடியின் வருகையானது வெளியில் காட்டப்பட்ட காரணங்களைத் தாண்டி.,
பல்வேறுபட்ட அரசியல் உள்நோக்கங்கள், மற்றும் அடுத்து இலங்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றத்தினை காட்டுவதாகவே அமைந்து விட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
காரணம் ஓர் உத்தியோக பூர்வ விஜயத்திற்காக இலங்கை ஒரு நாள் பயணமாக இலங்கை வந்த பாரதப்பிரதமர், நாட்டில் பல்வேறு தரப்புடனும் ஒரேநாளில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த விடயம் இந்தியாவின் கைப்பாவையாக இலங்கை மாற்றம் பெற்று வருகின்றதா என்ற சந்தேகத்தையும் கூட ஏற்படுத்தி விட்டதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றைத் தாண்டி மிக முக்கியமான விடயம் பாரதப் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பானதாகும். இப்போதைக்கு நாட்டில் விடுதலைப் புலிகளோ அல்லது வேறு வகையான அச்சுறுத்தல்களே இல்லை என்பதனை அரசு உறுதிப்படுத்தி விட்டது.
ஆனாலும் மோடிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதி உச்சம் மலையக விஜயத்தில் விஷேட படையினர் தவிர 6000 பொலிஸாரும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக நியமிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இதுவரையிலும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் இலங்கை வந்தபோதும் இவ்வாறானதொரு பாதுகாப்பு வழங்கப்பட வில்லை என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.
இந்த விடயத்தில் இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில் பாரதப் பிரதமருக்கு இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் நம்பிக்கை அற்ற நிலையே இருப்பதாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே ராஜீவ் காந்தி இலங்கை வந்தபோது நடந்த தாக்குதலையும் மோடி மறந்திருக்க மாட்டார். அதேபோல் இலங்கை சீனாவுடன் கொண்டுள்ள நட்புறவினால் தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என்பதிலும் மிகக் கவனம் கொண்டே இத்தகைய பாதுகாப்பில் அக்கறை காட்டப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையிலும் இலங்கை வந்து மிக முக்கிய பேச்சுவார்த்தைகளில் பாரதப் பிரமர் ஈடுபட்டும் சென்றுள்ளமை, அரசியல் நோக்கம் தவிர வேறு காரணங்கள் இல்லை, கூடிய விரைவில் இதன் விளைவுகளை இலங்கை சந்திக்கும் என்பது எதிர்பார்ப்பாகும்.