முல்லைத்தீவு ஐயங்கன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை நிர்வாகத்தினரின் அசமந்தம் காரணமாக முழுமையாக பழுதடைந்த்தாக உறவுகள் தெரிவிக்கின்றனர்.
துணுக்காயில் இடம்பெற்ற விபத்தில் புவனேஸ்வரநாயகம் – நிசாந்தன் என்னும் பழையமுறுகண்டியைச் சேர்ந்த , 27 வயது ஒரு பிள்ளையின் தந்தையை உயிரிழந்திருந்தார். இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் முகம் மற்றும் உடலின் முகப்பு பகுதிகளில் சேதம் இன்றிய நிலையிலேயே கானப்பட்டது. அதாவது விபத்து காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற நிலையில் வாகன வசதி கிட்டாதமையின் காரணமாகவே சுமார் ஒரு மணிநேரம் தாமதமாகியது வைத்தியசாலையில் அனுமதிக்கபடும் வரையில் உரையாடியும் இருந்தார்.
இந்த நிலையில் துரதிஸ்ட வசமாக உயிரிழந்தார். அவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மல்லாவி வைத்தியசாலையில் இருந்து நேற்று முன்தினம் மிகவும் நல்ல நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டவரின் மரண விசாரணைகள் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்து நேற்றைய தினம் மதியத்தை தாண்டி சடலம் ஒப்படைக்கப்பட்டபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்த்து. அதாவது கொடிய தொற்று நோய் ஒன்றில் உயிரிழந்தவரின் சடலம்போன்று திறக்க முடியாதவாறு மூடி சீல் வைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது தவறு இடம்பெற்றுவிட்டதாகவும் அதாவது சடலத்தை பாதுகாக்கும் குளிரூட்டியிலேயே வைத்திருந்தோம் இருப்பினும் குளிரூட்டி இயங்கவில்லை. அதனால் சடலம் பழுதடைந்து விட்டது என்கின்றனர்.
இது மரத்தில் இருந்து வீழ்ந்தவனை மாடு ஏறி மிதித்த செயல்போன்று உள்ளது. அதாவது உயிரிழந்தவரின் உறவுகள் உயிரிழந்தவரின் முகத்தைக்கூட பார்க்க முடியாத நிலமை ஏற்பட்டு விட்டது. என்கின்றமை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி கஜேனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
குறித்த குளிரூட்டி பழுதடைந்து அன்மையில் சீர் செய்தோம். இதனால் குளிரூட்டி இயங்கும் என்ற நம்பிக்கையில் வைக்கப்பட்டுவிட்டது. அதனால் சடலத்தை எடுக்கும் வரையில் இடையில் அவதானிக்கவில்லை. இறுதியில் சடலத்தை எடுக்கும்போதே குளிரூட்டி இயங்கவில்லை. அதனால் ஏற்பட்ட வெப்பத்தில் பழுதடைந்துவிட்டது. என்பது கண்டறியப்பட்டு உறவுகளிடம் உண்மையைத் தெரிவித்தோம். என்றார்

