இந்தோனேஷியாவில் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டம் : ஈழத்தமிழர் ஐவர் வைத்தியசாலையில்
இந்தோனேஷியாவில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்களும், பெண் ஒருவர் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போதும் அதன் பின்னர் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தலை தொடர்ந்து இலங்கை தமிழர்கள் இந்தோனேஷியாவில் அகதிகலாக தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில, குறித்த அகதிகளின் ஈழத்தமிழரின் அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட நிலையில், அவர்கள் தற்போது இலங்கைக்கு திருப்பி அனுப்ப கூடிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் இலங்கை இராணுவத்தினரால் கொலை செய்யப்படலாம் அல்லது காணாமல் ஆக்கப்படலாம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எனவே, தம்மை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் எனவும், தமக்கு அகதி அந்தஸ்த்து வழங்கி தமது வாழ்வில் ஒளியேற்றுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தம்மை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என வலியுறுத்தி கடந்த 28ஆம் திகதி முதல் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று ஐந்தாவது நாளை அடைந்துள்ள நிலையில், உடல் நிலை மோசமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.