இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எழுதி வெளியிட்ட புத்தகத்தில் இந்துக்களின் மனம் புண்படும்படியான கருத்துகள் இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்ற ஆண்டு ‘Turbulent Years 1980 – 1996’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நிகழ்ந்த சில சம்பவங்களை முகர்ஜி அவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புத்தகத்தின் குறிப்பிட்ட பகுதியில் இந்துக்கள் மனம் புண்படும்படியான கருத்துகள் இருப்பதாகக் கூறப்பட்டது.
இதையொட்டி புத்தகத்தின் ஆசிரியரான பிரணாப் முகர்ஜி மீது வழக்குத் தொடர டெல்லி கீழ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் கீழ் நீதிமன்றத்தில் தள்ளுபடியான வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் எடுத்து நடத்த வேண்டுமென்று கூறி மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை வரும் செப்டம்பர் 16-ம் திகதி வரும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மனுதாரர், ‘நாங்கள் இந்தியாவின் ஜனாதிபதிக்கு எதிராக எதுவும் கூறவில்லை. நாங்கள் அந்த புத்தகத்தின் ஆசிரியர் மீதுதான் குற்றம் சுமத்துகிறோம்.
அந்த புத்தகத்தின் ஆசிரியராக பிரணாப் முகர்ஜி உள்ளார். அவர் எப்படி, கோடிக்கணக்கான இந்துக்கள் மனம் புண்படும்படியான கருத்தை எழுதலாம்’ என்று தெரிவித்துள்ளனர்.