இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற கால்பந்தாட்டப் பயிற்சியகங்களுக்கு இடையிலான அழைப்பு கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இலங்கையின் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம் பங்குபற்றிய 3 வயதுப் பிரிவுகளிலும் சம்பியன் பட்டங்களை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்தது.
இலங்கையைச் சேர்ந்த கால்பந்தாட்டப் பயிற்சியகம் ஒன்று வெளிநாட்டில் 3 சம்பியன் பட்டங்களை சூடியது இதுவே முதல் தடவையாகும்.
12 வயதுக்குட்பட்ட, 14 வயதுக்குட்பட்ட, 16 வயதுக்குட்பட்ட ஆகிய 3 வயதுப் பிரிவுகளில் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம் சம்பியனானதுடன் சிறந்த வீரர்களுக்கான 6 விசேட பரிசுகளையும் இந்த பயிற்சியக வீரர்கள் பெற்றமை பாராட்டுக்குரிய விடயமாகும்.
12 வயதுக்குட்பட்ட, 14 வயதுக்குட்பட்ட, 16 வயதுக்குட்பட்ட ஆகிய மூன்று அணிகளிலும் இடம்பெற்ற வீரர்களின் அதிசிறந்த ஆற்றல்களும் அர்ப்பணிப்புத் தன்மையுமே சம்பியன் பட்டங்களை வென்றெடுப்பதற்கு பிரதான காரணம் என பெங்களூரிலிருந்து மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் ஸ்தாபகத் தலைவரும் தலைமைப் பயிற்றுநருமான ஒகஸ்டின் ஜோர்ஜ் தெரிவித்தார்.
‘எமது பயிற்றுநர்களின் அர்ப்பணிப்புத்தன்மையும் கடின உழைப்புமே இளம் வீரர்கள் அபரிமிதமான திறமைகளை வெளிப்படுத்தி சம்பியன் பட்டங்களை சூடுவதற்கு உதவியது. அத்துடன் இந்த வெற்றிகள் இலங்கைக்கு புகழீட்டிக் கொடுத்தது எமக்கு நிறைந்த மன மகிழ்ச்சியைத் தருகிறது. இலங்கையில் தற்போது கால்பந்தாட்டம் முடங்கிக் கிடக்கும் நிலையில் இத்தகைய போட்டிகள் மூலம் இளம் வீரர்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவர கிடைத்ததையிட்டு பெருமை அடைகிறோம்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
12 வயதுக்குட்பட்ட பிரிவு

இந்த சுற்றுப் போட்டியில் 12 வயதுக்குட்பட்ட மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியக அணி தோல்வி அடையாத அணியாக சம்பியனானது விசேட அம்சமாகும். இதில் 6 போட்டிகளில் 5இல் வெற்றியீட்டிய மென்செஸ்டர் ஒரு போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டு சம்பியனானது.
மேர்க்யூரியல் எவ்.ஏ. (3 – 0, 2 – 0, 4 – 1), ஒஸ்டின் டவுன் எவ்.சி. (2- 0, 1 – 0), ஆகிய அணிகளை வெற்றிகொண்ட மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம், பாக்கா பயிற்சியகத்துடனான போட்டியை (0 – 0) வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டு சம்பயினானது.



இப் பிரிவில் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சிக வீரர்களான ஒகஸ்டின் மெஸி சுற்றுப் போட்டி நாயகனாகவும் முவாஸ் மிப்தா சிறந்த வீரராகவும் எம்.ஆர். முஹம்மத் சிறந்த கோல்காப்பாளராகவும் தெரிவாகினர்.
14 வயதுக்குட்பட்ட பிரிவு

14 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்குபற்றிய மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியக அணி 2 வெற்றிகள், 2 தோல்விகள், 2 வெற்றிதோல்வியற்ற முடிவுகள் என்ற பேறுபேறுகளுடன் சம்பியனானது.
மெர்க்யூரியல் எவ்.ஏ. அணியுடன் முதல் சுற்றில் 1 – 0 என வெற்றிபெற்ற மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம் 2ஆம், 3ஆம் சுற்றுகளில் முறையே 0 – 2, 0 – 1 என தோல்வி அடைந்தது.
ஒஸ்டின் டவுன் எவ்.சி. அணியுடனான முதல் சுற்றை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகம் 2ஆம் சுற்றில் 1 – 0 என வெற்றிகொண்டதுடன் பாக்கா பயிற்சியகத்துடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி (0 – 0) முடித்துக்கொண்டது.

இப் பிரவில் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியக வீரர் தசீம் அஹ்மத் சிறந்த வீரராகத் தெரிவானார்.
16 வயதுக்குட்பட்ட பிரிவு

ஒஸ்டின் டவுன் எவ்.சி. அணியை (2 – 1, 1 – 0) வெற்றிகொண்ட மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகம் பாக்கா பயிற்சியகத்துடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி (0 – 0) முடித்துக்கொண்டு தோல்வி அடையாத அணியாக சம்பயினானது.


இப் பிரிவில் சிறந்த வீரராக மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியக வீரர்களான எம்.ஐ.எம். ரிஷார்ட் சிறந்த வீரராகவும் எம். ஷஹில் சிறந்த கோல்காப்பாளராகவும் தெரிவாகினர்.