ஆறு அம்சக் கோரிக்கைகளுடனான மனு பிரித்தானிய பிரதமரிடம் கையளிப்பு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் பிரித்தானிய பிரதமரின் அலுவலகம் முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாக 6 அம்சக் கோரிக்கைகளுடன் கூடிய மனு பிரித்தானியப் பிரதமர் திரேசா மேயிடம் கையளிக்கப்பட்டது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானிய வாழ் தமிழர்களால் முன்னெடுத்து வரப்படும் காலவரையறையற்ற தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் 5 ஆவது நாளான நேற்றைய தினம் மேற்படி மனு கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 34ஆவது அமர்வு ஜெனிவாவில் நடைபெற்று வரும் நிலையில் இலங்கைக்கு ஐ.நா. மேலும் காலநீடிப்பு வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தயும் தமிழ் மக்களின் சமகால கோரிகக்கைகளை முன்னிறுத்தியும் பிரித்தானியாவில் காலவரையறையற்ற மாபெரும் தொடர் உணவுதவிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
ஐ.நா.வின் 34ஆவது அமர்வு கடந்த 28ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமான நிலையில் அதற்கு முதல் நாளான 27ஆம் திகதி முதல் வெஸ்மினிஸ்டர் நகரில் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமரின் வாசல்ஸ்தலத்திற்கு முன்னால் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்படி அகிம்சைவழிப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையிலேய தொடர் போராட்டத்தின் 5 ஆவது நாளான நேற்றைய தினம் (2.3.2017) 6 அம்சக் கோரிக்கைகளுடன் கூடிய மனுவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் இராசலிங்கம் திருக்குமரன் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சர் மணிவண்ணன் பத்மநாதன் ஆகியோர் பிரத்தானிய பிரதமரின் வாசல்ஸ்தலத்தில் கையளித்துள்ளனர்.