பாராளுமன்ற ஆடை மரபுக்கு அமையவே சபைக்கு வந்துள்ளேன். வேண்டுமாயின் ஆடையை கழற்றிக் காட்டவா என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரனை நோக்கி வினவினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முதல் தடவையாக வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் வந்திருந்தார். இந்நிலையில் அவர் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்தார்.
இதன்போது எழுந்த ஆளும் தரப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், அணிந்து வந்த ஆடை பாராளுமன்ற ஒழுங்கு முறைக்கு உட்பட்டதா என்றவாறாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அர்ச்சுனா, நான் அணிந்து வந்திருக்கும் ஆடை பாராளுமன்ற மரபுகளுக்கு உட்பட்டதுதான். நான் பாராளுமன்றத்திற்குப் பொருத்தமான ஆடையையே அணிந்து வந்துள்ளேன். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், வேண்டுமென்றால் ஆடையை கழற்றிக் காண்பிக்கவா? என்று கேட்டார்.
இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர், ‘ஆடை குறித்த விவாதம் தேவையில்லை, அது ஒரு பிரச்சினையல்ல’ என்று தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்புமாறு கூறி சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவந்தார்.













