சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் அனோஜன் சிவராசாவிற்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்ட முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அங்குள்ள சட்டக் குழுவினர் தற்போது அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேல்முறையீட்டைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஒக்டோபர் 17 என்றும், சவுதி சட்ட நிறுவனம் ஒன்றுடன் கலந்தாலோசித்த பிறகு சட்டக் குழுவினர் அதனை விரைவில் பூர்த்தி செய்து தாக்கல் செய்வார்கள் என்றும் ஹேரத் கூறினார்.
அனோஜனுக்கு தேவையான சட்ட மற்றும் தூதரக உதவி
இலங்கை சட்ட நிபுணர்களும் சவுதி சட்ட ஆலோசகர்களும் இணைந்து இந்த மேல்முறையீட்டுப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதேவேளை வெளியுறவு அமைச்சகம், ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவை அனோஜனுக்கு தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளை வழங்குவதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னரே, அனோஜனின் தண்டனைக் குறைப்பு அல்லது பொது மன்னிப்பு கோருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஹேரத் குறிப்பிட்டார்
வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது எந்தவொரு தலையீட்டையும் ஆதரிக்க முடியாது என்றும், பொது மன்னிப்பு கோரும் இராஜதந்திர நடவடிக்கைகள் நீதிமன்ற செயல்முறை முடிந்த பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சவுதி அதிகாரிகள் பேச்சுவார்த்தையின் போது தெரிவித்ததாக அவர் கூறினார்.
இதற்கிடையில், சிறையில் அனோஜன் சமீபத்தில் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஒக்டோபர் 6 அன்று சிறைக்குச் சென்று, சிறை நிர்வாகத் தலைவர் மற்றும் சிறை மருத்துவரைச் சந்தித்தனர்.
அனோஜன் மீதான தாக்குதல்
சவுதி சிறை அதிகாரிகளால் தூதரகத்திற்கு வழங்கப்பட்ட தகவலின்படி, அனோஜனுக்கும் அவருடன் ஒரே அறையைப் பகிர்ந்துகொண்ட மற்றொரு கைதிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, அது கைகலப்பாக மாறியுள்ளது.

அனோஜனின் முகத்தில் கீறல்கள் மற்றும் நகங்களால் ஏற்பட்ட காயங்கள் மட்டுமே இருந்ததாகவும், கத்தி, கூர்மையான கருவி அல்லது வேறு எந்த ஆயுதமும் பயன்படுத்தப்படவில்லை என்றும் சிறை அதிகாரிகளும் மருத்துவரும் இலங்கை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக ஹேரத் கூறினார்.
இருப்பினும், அந்தச் சந்திப்பின்போது இலங்கைத் தூதரக அதிகாரிகள் அனோஜனை நேரில் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்பதையும், அவரது காயங்கள் குறித்த தகவல்கள் சவுதி அதிகாரிகளால் மட்டுமே வழங்கப்பட்டன என்பதையும் அமைச்சர் உறுதிப்படுத்தினார். அனோஜனின் உயிருக்கு தற்போது எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்றும், அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளதாக ஹேரத் தெரிவித்தார். அனோஜன் வேறொரு சிறை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்பவேண்டாம்
அனோஜனுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஹேரத், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். சிவராசாவுக்காகச் சட்ட மற்றும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ளும்போது, சவூதி அதிகாரிகள் அதிகாரபூர்வமாக வழங்கும் தகவல்களையே இலங்கை நம்பியுள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

அனோஜனுக்குத் தீர்வு காண்பதற்காக, சவூதி அரேபியாவின் சட்ட மற்றும் நீதித்துறை கட்டமைப்பிற்குள் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.












