உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அவதிப்பட்ட வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை வாஜ்பாய் தனது 93-வது வயதில் காலமானார்.
வாஜ்பாய் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பு:
* மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 1924-ம் ஆண்டு, டிசம்பர் 25-ம் தேதி அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தார்.
* நன்கு கல்வி பயின்ற குடும்பத்தில் பிறந்த வாஜ்பாய், எம்.ஏ அரசியல் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன்பின் தன்னை ஆர்எஸ்எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார்.
* கடந்த 1942-ம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும், சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்று வாஜ்பாய் சிறை சென்றார்.
* தீவிர ஆர்எஸ்எஸ் தொண்டரான வாஜ்பாய், நாடு சுதந்திரம் பெற்ற பின், காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகத் தொடங்கப்பட்ட ஜனசங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தீவிரமாக விசுவாசியாக இருந்த வாஜ்பாய் பாரதிய ஜனசங்கம் உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றினார்.
* கடந்த 1975-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அவசரநிலையின்போது, கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் வரை வாஜ்பாய் சிறையில் அடைக்கப்பட்டார்.
* அதன்பின், ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது, அப்போது பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக வாஜ்பாய் பணியாற்றினார். பல்ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வாஜ்பாய், கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக வலம் வந்தார்.
* வாஜ்பாயின் சொல் வளத்தையும், பேச்சுத்திறனையும் முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேரு பலநேரங்களில் புகழ்ந்துள்ளார். எதிர்காலத்தில் பிரதமராகும் வாய்ப்பு வாஜ்பாய்க்கு உண்டு என்று நாடாளுமன்றத்திலேயே பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
* அதன்பின் ஜனதா கட்சியின் ஆட்சி கவிழ்ந்த நிலையில், அதைச் சீரமைத்த வாஜ்பாய் ஆர்எஸ்எஸ் அமைப்பில் தனது நெருங்கிய நண்பர்களாக இருந்த எல்.கே.அத்வானி, பைரோம் சிங் செகாத் ஆகியோரின் உதவியுடன் கடந்த 1980-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியை வாஜ்பாய் தோற்றுவித்தார். பாஜகவின் முதல் தலைவராகவும் வாஜ்பாய் பொறுப்பேற்றார்.
* அதுமட்டுமல்லாமல் நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக வலுவாக எந்தக் கட்சியும் உருவாகாமல் இருந்த நிலையில், அதை தீவிரமாக எதிர்க்கும், விமர்சிக்கும் கட்சியாக பாஜகவை உருவாகியவர் வாஜ்பாய். அதன்பின் கடந்த 1984-ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்ட பாஜக, வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன்பின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தைக் கையில் எடுத்த பின், பாஜகவின் வளர்ச்சியும், வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் பெயரும் புகழ்பெறத் தொடங்கின.
* கடந்த 1995-ம் ஆண்டு நடந்த குஜராத், மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றியைப் பெற்றது. அந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாஜக மாநாட்டில், பாஜகவின் பிரதமர் வேட்பாளராக வாஜ்பாயை அறிவித்தார் அத்வானி.
* மதவாதக் கட்சி என்று எதிர்க்கட்சிகளால் பாஜக விமர்சிக்கப்பட்டாலும், வாஜ்பாயின் பேச்சும், செயல்பாடுகளும் மதச்சார்பின்மையைக் காக்கும் முயற்சியிலும், அதற்கு ஆதரவாகவும் இருந்தார்
* கடந்த 1996-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவானது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா, வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைத்தார்.
* கடந்த 1996-ம் ஆண்டு மே 16-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை 13 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்த வாஜ்பாயால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால் பிரதமர் பதவியை வாஜ்பாய் ராஜினாமா செய்தார்.
* அதன்பின் 1998-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் இல்லாத கட்சி ஒன்றில் பிரதமராக இருந்து 5 ஆண்டுகள் நிறைவு செய்த பிரதமராக வாஜ்பாய் விளங்கினார்.
*கடந்த 1999, மே 19-ம் தேதி முதல் 2004, மே 13-ம் தேதிவரை பிரதமர் பதவியில் வாஜ்பாய் இருந்தார்.
* இதற்கிடையே 1998-ம் ஆண்டுமுதல் 13 மாதங்கள் ஆட்சியில் இருந்தபோது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி நாடாளுமன்றத்தில் ஆதரவை வாபஸ் பெற்றதால், வாஜ்பாய் ஆட்சியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் 3-வது முறையாகப் பிரதமராக பதவி ஏற்ற வாஜ்யாப் 5 ஆண்டுகளை முழுமை செய்தார்.
* கடந்த 1957-ம் ஆண்டில் இருந்து 40 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராகவும், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் வாஜ்பாய் இருந்துள்ளார்.
* வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் இந்தியா வெற்றிகரமாக போக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தியது. இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நட்புறவு மோசமாக இருந்த நிலையில், அதைச் சீராக்க முன்னெடுத்தவர் வாஜ்பாய். அதில் குறிப்பாக கடந்த 1999-ம் ஆண்டு டெல்லி-லாகூர் இடையே பஸ் போக்குவரத்து சேவையைத் தொடங்கினார். காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை வாஜ்பாய் முன்னெடுத்தார்.
* ஆனால், கடந்த 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போர் வாஜ்பாயின் ஆட்சியில் மிக முக்கியமானதாகும். பாகிஸ்தான் படைகள் இந்தியாவுக்கு ஊடுருவ காஷ்மீர் பள்ளத்தாக்கில் குறிப்பிட்ட பகுதியை ஆக்கமித்தது. ஆனால் துணிச்சலுடன் செயல்பட்ட வாஜ்பாய் தலைமையிலான அரசு பாகிஸ்தானுடன் போரிட்டு வெற்றி பெற்று படைகளை வாபஸ் பெற வைத்தது.
* அனைத்துக் கட்சியினராலும் மிகவும் மதிக்கப்படக்கூடிய தலைவராக வாஜ்பாய் விளங்கினார். சிறந்த கவிஞராகவும், பேச்சாளராகவும் வாஜ்பாய் இருந்தார். நாட்டுக்கு வாஜ்பாய் ஆற்றிய சேவைக்காக கடந்த 1992-ம் ஆண்டு பத்மபூஷண் விருதும், நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது கடந்த 2015-ம் ஆண்டும் வழங்கப்பட்டது.

