போரின் போது இடம்பெயர்ந்த மக்களின் சொத்துக்கள் தொடர்பான எந்த விபரங்களும் எங்களிடம் இல்லை என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வின் போது, யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சமடைந்த மக்களின் சொத்துக்கள் எங்கேனும் வைப்பீடு செய்யப்பட்டதா என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரின் இந்தக் கேள்விக்கு பதில் அளித்த சுவாமிநாதன்,
நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் பின்னர், வடக்கு கிழக்கு மக்கள் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவ்வாறு தங்க வைக்கப்பட்ட மக்களின் சொத்துக்கள் குறித்து எந்தவிதமான தகவல்களும் எங்களிடத்தே இல்லை.
இதேவேளை, வடக்கில் குறிப்பாக முள்ளிவாய்க்கால் போர் முடிந்த பின்னர் அகதிகளாக வெளியேறியவர்கள் வவுனியாவில் தான் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அங்கு தங்க வைக்கப்பட்டவர்களின் நகைகள், சொத்துக்கள் போன்ற எந்தவிதமான தகவல்களும் வவுனியா பிரதேச செயலகத்திலும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.