கிரீஸ்மன் அபாரம்: யூரோ கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ்
யூரோ கிண்ணம் கால்பந்து போட்டியின் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் பலம் பொருந்திய ஜேர்மனி அணியை துவம்சம் செய்த பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு அதிரடியாக நுழைந்துள்ளது.
யூரோ கிண்ண கால்பந்து போட்டியின் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் பலம் பொருந்திய ஜேர்மனி அணி இன்னொரு ஜாம்பவான் அணியான பிரான்சை எதிர்கொண்டது.
கிண்ணத்தை வெல்லும் நோக்கில் ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக விளையாட தொடங்கிய பிரான்ஸ் எதிரில்லாத 2 கோல்களில் அதிரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆட்டத்தின் துவக்கம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இரண்டு அணிகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.
ஆட்டத்தின் 43 வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கச்சிதமாக கோலாக மாற்றி அணியின் வெற்றி வாய்ப்பை வலு சேர்த்தார் நட்சத்திர ஆட்டக்காரர் கிரீஸ்மன். தொடர்ந்து பிரான்ஸ் அணி தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் கோலாக்க முயன்று தோல்வி கண்டது.
இதனிடையே 72 வது நிமிடத்தில் கிரீஸ்மன் அடுத்த கோல் அடித்து அணியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்தார்.
இந்த யூரோ கிண்ணத்தில் கிரீஸ்மன் 6 கோல்கள் சேர்த்துள்ளார். மற்றும் 2 கோல் வாய்ப்பை உருவாக்கி வழங்கியுள்ளார்.
மட்டுமின்றி ஜேர்மனி அணி யூரோ கிண்ணத்தில் இதுவரை சந்தித்த ஆறு அரை இறுதி ஆட்டங்களில் 4 ஆட்டத்தில் இத்துடன் தோல்வியை சந்தித்துள்ளது.
வரும் ஞாயிறன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் போர்த்துகல் அணியுடன் பிரான்ஸ் பலபரிட்சை நடத்துகிறது.